பாகிஸ்தானில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை.. நிர்மலா சீதாராமன் கருத்தால் அமித்ஷாவிற்கு சிக்கல்
சென்னை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும், நிர்மலா சீதாராமன் நடுவே கருத்து வேறுபாடு நிலவுவது தெரியவந்துள்ளது.
பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா சென்னையில், ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:
விமானப் படைத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. வெளியுறவுச் செயலாளர் விஜய் கோஹ்லே என்ன அறிக்கையை வெளியிட்டாரோ, அதுதான், அரசின் நிலைப்பாடு என்று அவர் கூறினார்.
விஜய் கோஹ்லே, தனது பேட்டியின்போது, இந்திய தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் அவர் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
ஆனால், சில தினங்கள் முன்பாக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, இந்திய விமானப்படைத் தாக்குதலில் 250 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பேசினார். தற்போது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த தகவல் இல்லை என்று பாதுகாப்பு துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனே கூறியுள்ளார்.
அமித்ஷா-நிர்மலா சீதாராமன் நடுவே வேறுபட்ட கருத்து நிலவுவது இந்த குழப்பத்தை மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications