”பிரிவெனும் துயரம் வராது” பாஜக உரசலுக்கு இடையே எதை சொல்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன்?
சென்னை: அன்பையும் அரவணைப்பையும் சேர்த்தாலே போதும், பிரிவெனும் துயரம் வாராது போகுm. நாளைய தினத்தை மகிழ்வோடு எதிர்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையே எதிர்க்கட்சிபோல் அரசுக்கு எதிராக பேசி வருவதாக பேச்சு அடிபட்டு வருகிறது.
பாஜக அதிமுகவை அதிகாரம் செலுத்துவதாகவும் கூறப்பட்டது. இதனால் அடிக்கடி இரு கட்சி தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது அந்த உரசல் அதிகரித்து இருக்கிறது.

பொன்னையன் பேச்சு
அண்மையில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், "தமிழ் மக்களின் பிரச்சனைக்காக தமிழ்நாடு பாஜக போராடவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக போராடாமல் பாடுபடுவோம் என்று கூறிக்கொண்டிருக்கும் பாஜகவின் கூற்றுகளை, உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அதை மக்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் சொல்ல வேண்டும். உண்மையிலேயே தமிழ்நாடு பாஜக மக்களுக்காக பாடுபடவில்லை என்பது நாடறிந்த உண்மை. இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும்." என்றார்.

பாஜக எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, அதிமுக எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என விமர்சித்தார். 4 எம்.எல்.ஏக்களை வைத்துள்ள பாஜகவே எதிர்க்கட்சியாக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணனும், பாஜகவினர் விமர்சித்தால் அதிமுக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

எடப்பாடி கண்டனம்
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "48 ஆண்டுகளாக நான் அதிமுகவில் இருக்கிறேன். சட்டமன்றத்தில் நானும், ஓ.பன்னீர்செல்வமும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் எவ்வாறு பேசுகிறோம் என்பது மக்களுக்கு தெரியும். பாஜக சட்டப்பேரவைத் தலைவர் எப்படி பேசுகிறார் என்றும் மக்களுக்கு தெரியும். வி.பி.துரைசாமி எந்த கட்சியிலிருந்து பாஜகவுக்கு வந்தார் என்பதையும் மக்கள் அறிவார்கள். அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது." என்றார்.

அண்ணாமலை பேச்சு
இதுகுறித்து இன்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், "அதிமுகவில் பாஜகவை பொன்னையன், செல்லூர் ராஜூ போன்றவர்கள் விமர்சித்திருக்கின்றனர். அதிமுகவின் தலைவர்களுக்கு யாரும் பதில் தரக் கூடாது என பாஜகவினரிடம் தெரிவித்திருக்கிறோம். அதிமுக தலைவர்களின் கருத்துகள் சொந்த கருத்துகள். அதிமுகவின் அதிகாரப்பூர்வமான நிலைப்பாட்டை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும்தான் தெரிவிப்பர். பாஜகவைப் பொறுத்தவரை அதிமுகவை அழித்துதான் வளரவேண்டும் என்கிற நிலை தமிழகத்தில் இல்லை." என்றார்.

மா.பா.பாண்டியராஜன் கருத்து
இந்த நிலையில், "அன்பையும் அரவணைப்பையும் சேர்த்தாலே போதும், பிரிவெனும் துயரம் வாராது போகும். நாளைய தினத்தை மகிழ்வோடு எதிர்கொள்வோம்." என அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்ததாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். அதை மா.பா.பாண்டியராஜன் ட்விட்டரில் ரீட்வீட் செய்து இருக்கிறார். அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் பிரிவு குறித்து மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ள கருத்து பாஜகவுடனான மோதல் பற்றிதான் என பலரும் கருத்திட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications