'ஓயாத மரண ஓலம்..' கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழகத்தில் ஆண்டுக்கு தனி நிதி.. எவ்வளவு தெரியுமா?
சென்னை: கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்ததில் 50 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை, இதற்காக ஆண்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இப்படி குடித்தவர்களில் பலருக்கு வாந்தி, மயக்கம், நெஞ்செரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. எனவே உறவினர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு 35 பேர் உயிரிழந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி சுமார் 50 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க மதுவிலக்கு பிரிவு செயல்பட்டு வருகிறது. இருப்பினும் பாக்கெட்டில் சாராய விற்பனை தமிழகத்தின் பல பகுதிகளில் படுஜோராக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என தொடர் குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படி இருக்கையில்தான் கள்ளக்குறிச்சியில் பாக்கெட் சாராயம் குடித்த 50 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடி ஆக்ஷனில் இறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரை ஷ்ரவண் குமார் ஜடாவத்தை பணியிடமாற்றம் செய்தும் காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவையே கூண்டோடு சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அதேபோல உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.
இவையெல்லாம் சம்பவம் நடந்த பின்னர் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள். ஆனால், வழக்கமாக ஒவ்வொரு பட்ஜெட்டின்போதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க குறிப்பிட்ட அளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. எவ்வளவு ஒதுக்கப்படுகிறது? என்பது குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதாவது, கடந்த 2023-2024ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்கு ரூ.5 கோடி மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிதியானது, கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கவும் மற்றும் அதன் மூலம் ஏற்படும் தீமைகளை முற்றிலுமாகக் களையவும். இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களைக் கள்ளத்தனமாகக் கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்தல்,
தெளிந்த சாராவி கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல். கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற மதுவிலக்குக் குற்றங்களுக்கு சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்கள் மீண்டும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் வேறு தொழில்களை மேற்கொள்ள உதவிடுவதற்காகவும் செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இது தவிர, மது அருந்துதலுக்கு மக்கள் அடிமையாகாமல் இருக்கவும், அவ்வாறு மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், அப்பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடனும். மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும் மாவட்டந்தோறும் போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகளைப் பற்றி விழிப்புணர்வுப் பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கும் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுவருகிறது.
மது அருந்துதலுக்கு எதிரான விழப்புணர்வுப் பிரச்சாரத்துடன் போதை மருந்துகளை தவறான பயன்பாட்டிற்குப் பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரத்தையும் இணைந்து மேற்கொள்ள ரூ.4.00 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் எரிசாராயம், போலி மதுபானம், பிற மாநிலங்களில் இருந்து மதுபானம் கடத்துதல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் குறித்து தகவல்கள் தரும் உளவாளிகளுக்கு பண வெகுமதி வழங்கும் பொருட்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் சொந்த நிதியிலிருந்து ரூ. 15 இலட்சம் தொகையினை வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. 2023-2024.ஆம் நிதி ஆண்டில் இரகசிய தகவல் தரும் உளவாளிகளுக்கு வழங்கப்படும் வெகுமதித் தொகையை ரூ.15 இலட்சத்திலிருந்து ரூ.20 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எரிசாராயம். போலி மதுபானம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து கடத்தப்படும் மதுபான பாட்டில்கள் ஆகியவற்றைக் கைப்பற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் காவல் ஆளிநர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை இந்த முறை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications