2 சீட்டுக்குள் திருமா சுருண்டது ஏன்? தனி சின்னம் தேடும் வைகோ ? ‘கை’ கழுவிய கமல்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக கூட்டணியில் மதிமுகவும் விசிகவும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று முடிவு எடுக்க என்ன காரணம்?

திமுக கூட்டணியில் கிட்டத்தட்டத் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. இந்தக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசைத் தவிர்த்து மற்ற மக்கள் அனைத்திற்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. இந்தத் தொகுதிப் பங்கீட்டில் இறுதிவரை கொஞ்சம் சலசலப்பை விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் உண்டாக்கிவிட்டது.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

திமுக தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அழைத்த அன்று, அதில் பங்கேற்காமல் உயர்மட்டக் குழு என்று ஒன்றைக் கூட்டி அதில் கலந்து கொண்டிருந்தார் கட்சியின் நிறுவனரும் தலைவருமான தொல்.திருமாவளவன். அதனால் கூட்டணிக்குள் அனல் வீசத் தொடங்கியது.

மறைமுகமாக அதிமுகவிடம் விசிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதோ என்று சந்தேகத்தை அது எழுப்பியது. அதற்கு ஏற்ப விசிகவின் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ், அதிமுகவிடம் இருந்து அழைப்பு வந்தது உண்மைதான் என்று சொல்லி இருந்தார். அதேபோல் பாஜககூட பேச முயன்றது என்றும் பேசி இருந்தார்.

அந்தப் பேச்சால், கூடுதல் விவாதம் எழுந்தது. இறுதியாக எல்லா பரபரப்பு முடிந்து விசிக 'சைலண்ட்' ஆகக் கொடுத்த 2 சீட்டை திமுகவில் பெற்றுக் கொண்டு வந்துள்ளது.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

இறுதி முடிவு இப்படித்தான் அமையும் என்பதை முன்கூட்டியே உணர்ந்திருப்பார் விசிகவின் தலைவர் தொ.திருமாவளவன். அப்படியான பட்சத்தில் அவர், இந்த விவாதங்களுக்கு இடமளிக்காமலிருந்திருக்கலாம்.

ஆனால், அதையும் தாண்டி விசிகவின் பலத்தை அவர் கூட்டணியில் உள்ள யாருக்கோ உணர்த்த விரும்பியுள்ளார். அதன் பொருட்டுதான் இந்த இழுபறி, விவாதம், சர்ச்சை எல்லாம் நடந்துள்ளது என்று யோசிக்கத் தோன்றுகிறது.

மூன்று சீட்டு கிடைக்கவில்லை என்றால் முதல்வரைச் சந்திப்போம் என்றார். கடைசியில் முதல்வரைச் சந்தித்து 2 தொகுதிக்கான ஒப்பந்த சீட்டுடன் வெளியே வந்துள்ளார்.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

இடையில் என்ன நடந்தது என்பது அவருக்கும் அவரது கட்சிக்கும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் திமுகவுக்குமே தெரியும்.

தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகி வெளியே வந்த திருமாவளவன் திரும்பவும் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று சொல்லி இருக்கிறார். கொடுக்கப்பட்ட தொகுதிகளில் மாற்றம் இல்லை. விழுப்புரமும் சிதம்பரமும் தனித் தொகுதிகள். இந்த இரண்டிலும் விசிக வழக்கம் போல் போட்டியிடுகிறது.

மதிமுகவுக்கு ஒரு சீட்டு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களைவை சீட்டும் சேர்த்து வழங்கப்படும் எனப் பேச்சு எழுந்தது. அதற்கு வாய்ப்பில்லை என்பதுபோல் க்ளைமேக்ஸ் முடிவு சொல்கிறது.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

திருமாவளவனைப் போல் வைகோவும் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தைப் பற்றி அறிவித்துவிட்டு, தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அழுத்திச் சொல்லி இருக்கிறார்.

திருமாவும் வைகோவும் செய்தியாளர்கள் கேட்பதற்கு முன்னதாகவே தனி சின்னம் என்பதை அழுத்தி அழுத்திச் சொல்லி வருகிறார்கள். விசிக மற்ற மாநிலங்களில் போட்டியிடுகிறது.

ஆகவே, மாநிலக் கட்சி என்ற நிலையை அது கடந்து வளர்ந்துள்ளது. வெற்றி எப்படி உள்ளது என்பதைக் காட்டிலும் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட ஒரு கட்சி வேறு மாநிலங்களில் வேட்பாளர்களைப் போடுவது பல ஆண்டுகளாக நடைபெறாத விசயம். அதிமுக அதற்கு முன்பு இதைச் சாதித்தது. வெற்றியும் பெற்றது.

விசிக சட்டசபையில் கூட இந்த முடிவை எடுக்கவில்லை. மக்களவைத் தேர்தலில் அந்த முடிவை எடுத்துள்ளது. உண்மையில் இது மிகப் பெரிய தைரியம்தான். ஆனால், அதையும் மீறி அதில் சில அரசியல் கணக்குகள் உள்ளன.

விசிகவுக்கு உள்ளாகவே வெற்றியை மனதில் வைத்து பலரும் உதயசூரியனில் நிற்பதை விரும்புகிறார்களாம். ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் கூட்டணி சின்னத்தில் நின்றுவிடலாம் என்று விசிக இரண்டாம் கட்டத் தலைவர்கள் பொதுக்குழு, உயர்மட்டக் குழுக் கூட்டணிகளில் கருத்துச் சொல்கிறார்களாம்.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

இப்படியே மாற்றுக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டுக் கொண்டிருந்தால், கட்சி எப்படி வளரும்? எப்படி அதற்கு என்று ஒரு அங்கீகாரம் கிடைக்கும்? ஆகவே அதை மனதில் வைத்து தலைவர் என்ற முறையில் தொல் திருமாவளவன் கருத்துச் சொன்னாலும், கூட்டணிக் கட்சியான திமுக தலைமையிடம் மறைமுகமாகப் பேசி, திருமாவை உதயசூரியன் சின்னத்தில் நிற்க வைக்கச் சம்மதம் வாங்கி விடுகிறார்களாம்.
அந்த ஜாலம் இனி செல்லாது என தன் கட்சியில் உள்ள 2 ஆம் கட்ட தலைவர்களுக்கு உணர்த்தவே ஒவ்வொரு முறையும் தனி சின்னத்தில் நிற்போம் என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறாராம் திருமா.

கூடவே திமுகவில் இப்போது அடுத்த கட்ட தலைவர்கள் உள்ளே உருவாகிவிட்டனர். திருமாவுக்கும் ஸ்டாலினுக்குமான உறவு என்பது வேறு. நட்பு என்பது வேறு. அதே நட்பை இளம் தலைமைகளிடம் பெற்றுவிட முடியாது.

ஆகவே, தனி சின்னத்தில் நின்றுவிட்டால் அவர்களின் அழுத்தம் இருக்காது என்று திருமா யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

அடுத்தபடியாக 3 தொகுதி ஏன் 2 ஆகச் சுருங்கியது என்பதற்கு வருவோம். கூட்டணியில் திமுகதான் பெரிய கட்சி. ஆகவே கடந்த முறை விசிகவின் வெற்றியை உறுதிசெய்ய திமுகவும் தன் பங்குக்குச் செலவு செய்துள்ளது.

விசிகவிடம் கடந்த காலங்களில் பெரிய அளவுக்கு நிதியாதாரம் இல்லை. அப்போது பின்புலமாக திமுகவே இருந்துள்ளது. இந்த முறை தொகுதியை அதிகப்படுத்திக் கொடுத்தால் சில தொழிலதிபர்கள் விசிகவுக்கு செலவழிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது உண்மை.

ஆனால், அவர்கள் நினைத்த மாதிரி விசிகவும் அதற்கு வளைந்து கொடுக்க வேண்டும்.

கடந்த காலங்களில் தங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த திமுகவைப் பகைத்துக் கொண்டு, புதிய உறவை மனதில் வைத்து முடிவெடுத்தால் பிற்காலத்தில் தனித்துவிடலாம் என்ற அச்சமும் விசிக தலைமைக்கு வந்துள்ளது.

எனவே கடந்த காலங்களில் தங்களின் வளர்ச்சிக்குத் துணையாக நின்ற திமுக கொடுப்பதைப் பெற்றுக்கொள்வோம் என்ற முடிவை திருமா எடுத்துள்ளார் என்கிறார்கள்.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

அதேபோல் சீட்டையும் அதிக கொடுத்து வைட்டமினையும் கூடுதலாகக் கொடுக்க திமுக இரண்டாம் கட்ட தலைமைகள் தயாராக இல்லையாம். இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலினைத் தாண்டி சில சக்திகள் உள்ளதால் மவுனம் காப்பதே சரி என்ற நிலைக்குத் திரும்ப வந்துள்ளார் என்கிறார்கள்.

இதற்கு மேல் இன்னொரு விசயமும் உள்ளது. வைகோ பார்த்து வளர்ந்தவர் திருமா. அவரே கூட்டணியில் ஒரு தொகுதியைப் பெற்றுக் கொண்டுள்ளார். அமைதியாகக் கூட்டணி பலத்தை நிரூபிக்க உழைப்பேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

சீனியரே அப்படி உள்ள போது வெறும் கட்சி வளர்ச்சியை மட்டும் பார்த்துப் பேசுவது முறையல்ல என்றும் திமுக சீரியர்ஸ் திருமாவை கேட்டுக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

கடந்த முறை கிடைத்ததைப் போல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1 என இதுவரை 9 தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன.

ஐஜேகே திமுக கூட்டணியை விட்டு வெளியே சென்றதால், அந்த ஒரு இடம் மநீமவுக்கு கிடைக்கும் என்றார்கள். கடைசிவரை கமல் கோவை தொகுதியைக் கேட்டு வலியுறுத்தியதாகவும் சொல்லப்பட்டது. அதில் கொஞ்சம் உண்மையும் உள்ளது என்கிறார்கள் மநீம தலைவர்கள்.

கம்யூனிஸ்ட்டுகளுக்குக் கோவைதான் சொர்க்கபுரி. அதைவிட்டுக் கொடுக்க எப்படி அவர்கள் முன்வருவார்கள். தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் தான் அந்தக் கட்சி உயிருடன் உள்ளது. அதையும் உருவ நினைத்தால்? ஆகவே திமுக அதற்குச் சம்மதிக்கவில்லை.

அதனால்தான், கமல்ஹாசன், 'இந்த முறை தேர்தலில் நானும் எனக் கட்சியும் போட்டிப் போடவில்லை. இது பதவிக்கான விசயம் அல்ல. நாட்டுக்கான விசயம். ஆகவே எங்குக் கைகுலுக்க வேண்டுமோ அங்கே கை குலுக்கி இருக்கிறேன்' என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லிவிட்டு விடைபெற்றுள்ளார்.

அவருடன் திமுக சார்பில் உதயநிதி நின்றிருந்தார். திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவே போதும் என மனம் இறங்கிவிட்டார் கமல்.

Thiruma withdraw Vaiko worry Kamal slips Dmk alliance update

காரணம் கட்சிக்குள் 'நீரோட்டம்' இல்லை. ஈரம் உள்ள தலைகள் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார்கள். அவரே செலவு செய்தால்தான். அதை உணர்ந்துதான் 'கை' நீட்டி இருக்கிறார்கள். அவர் கைகோர்த்து நிற்கலாம் என நழுவிவிட்டார்.

ஒருவேளை அவர் ஒரு சீட்டு பெற்றிருந்தால், தனி சின்னம் பிரச்சினை வந்திருக்கும். அது எப்படி என்கிறீர்களா? 'கை' குலுக்க வேண்டும் எனப் பூடகமாக அவர் பேசியதன் பொருளை அறிந்தவர்கள் உணர்வார்கள்.

இறுதியாக இப்போது திமுக கூட்டணியில் அந்தக் 'கை'தான் கொஞ்சம் பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எந்த வலையை விரித்தால் எந்த மீனைப் பிடிக்கலாம் என்பது திமுகவுக்கு யாரும் கற்றுத்தர வேண்டியதில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+