“பாஜக அரசியல் விளையாட்டை தொடங்கிடுச்சு..” கரூர் விவகாரத்தில் காங்கிரஸுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை
சென்னை: "கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக. பாஜக 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே. காங்கிரஸ் உடனடியாக உண்மை அறியும் குழுவை நியமிக்க வேண்டும்; பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் தலையீடு உடனடி தேவையாக உள்ளது" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியின் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பாஜகவின் அரசியல் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா இரங்கல் தெரிவித்ததோடு, சம்பவத்தை ஆய்வு செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் எட்டு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளார். இந்த குழுவில் பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினி தலைமையில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், அப்ரஜிதா சாரங்கி, ரேகா சர்மா, ஷிண்டே பிரிவு சிவ சேனாவைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் ஷிண்டே, மற்றும் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த புட்டா மகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு கரூருக்கு நேரில் வந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. முன்னதாக கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய இணையமைச்சர் எல். முருகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் பாஜகவின் இந்த நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறி, விசிக தலைவர் திருமாவளவன் தனது சமூக ஊடகப் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில் "கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக. கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.
பாஜகவின் இந்தச் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சி உடனடியாகத் தலையிட வேண்டும். பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாக உள்ளது. எனவே, ராகுல் காந்தி, இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications