“எல்.முருகன் அருந்ததியர் அல்ல! அவர் ஆர்.எஸ்.எஸ் காரர்” திருமாவளவன் சுளீர்
சென்னை: அருந்ததியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக, திருமாவளவன் மீது பாஜக தொடர்ந்து விமர்சனம் வைத்து வருகிறது. இந்நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அருந்ததியர் அல்ல.. ஆர்.எஸ்.எஸ்காரர் என்று திருமாவளவன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
பட்டியலின மக்களுக்கான உள் ஒதுக்கீடு குறித்து சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில், அருந்ததி சமூக மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று, அம்மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி, பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட 18% இடஒதுக்கீட்டில், அருந்ததி சமூக மக்களுக்கு 3% உள் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக அறிவித்தார்.

தமிழ்நாட்டை போலவே பஞ்சாப் மாநிலத்திலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை, தீர்ப்பு, மேல்முறையீடு என வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. கடந்த பிப்ரவரியில் விசாரணை முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் 6 நீதிபதிகள், "உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது" என்று தீர்ப்பளித்திருந்தனர். ஆனால், ஒரு நீதிபதி மட்டும், "குடியரசு தலைவருக்குதான் உள்ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இருக்கிறது" என்று தீர்ப்பளித்திருந்தார். இதனையடுத்து பெரும்பான் என்கிற அடிப்படையில், கருணாநிதி கொண்டு வந்த உள் ஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆனால், இதில் கிரீமிலேயர் விவகாரமும் அடங்கியிருந்தது. அதாவது, வருமானத்தின் அளவு நிர்ணயிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பாதிக்கிறார்கள் எனில், அவர்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு பலன்கள்? என்பதைதான் கிரீமிலேயர் கேள்வி எழுப்புகிறது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். தீர்ப்பு.. மேல்முறையீடு.. குறித்து பாஜக vs விசிக கருத்து மோதல் வெடித்திருக்கிறது.
நேற்று செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "சமூக நீதியைப் பற்றி பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. அனைத்து மக்களுக்கும், சமுதாயத்தின் கடைக்கோடியில் இருக்கும் மக்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது செல்ல வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் எண்ணம், கொள்கையாக இருந்தது. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார்.
அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்திருக்கிற திருமாவளவன் எப்படி தலித் தலைவராக இருக்க முடியும். இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் தலைவராக இருக்க முடியும். அவருடையது ஒரு சிறிய கட்சி. அந்தக் கட்சியின் சிறிய அமைப்புக்கான தலைவராகத்தான் அவரை நான் பார்க்கிறேன்.
ஒட்டுமொத்த தலித் மக்களுக்கான தலைவர் என்றால் அவர் அனைத்து தலித் மக்களையும் ஒரே பார்வையில் பார்க்க வேண்டும். அவருடைய உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூக நீதியைப் பற்றி பேச அவருக்கு எந்தவித தகுதியும் இல்லை. அருந்ததியர் மட்டும் தலித் அல்ல. அவர்களுக்கு கீழும் பெரும்பான்மையானோர் இருக்கின்றனர்.
ஒவ்வொரு தலித் மக்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்க வேண்டும். அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அந்த இட ஒதுக்கீட்டையே நீர்த்துப் போகச் செய்யும் செயலை செய்கிறவர்தான் திருமாவளவன். ஆகவே, திருமாவளவன் முதலமைச்சராகும் கனவு எல்லாம் ஒருபோதும் நடக்காது" என கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள திருமாவளவன், "எல்.முருகன் அருந்ததியர் என்பது, ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் அந்த சமூகத்திற்கே தெரியும். அவர் ஆர்எஸ்எஸ்காரர். தன்னை ஒருபோதும் அருந்ததியர் என்று காட்டிக்கொண்டது கிடையாது. அருந்ததி மக்களின் இடஒதுக்கீடு குறித்த எந்த போராட்டத்திலும் அவர் பங்கேற்றது கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியினருக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் தொடுத்த வழக்கு, அதை எதிர்த்து அல்ல. கிரீமிலேயரை எதிர்த்துதான்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications