இம்பீச்மெண்ட் நோட்டீஸ்.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தானாக பதவி விலக வேண்டும்! திருமா வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதல்களை தூண்டியதாக தீர்ப்பு வழங்கியதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் இம்பீச்மெண்ட் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் ) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம்.
இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர் அவர்கள், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் விவகாரம்
எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களுக்கு எதிரான 'இம்பீச்மெண்ட் நோட்டீஸில்', அவர் ஒருதலைச் சார்போடும் அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார்; ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்; ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்டக் குற்றச் சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
ஜி.ஆர்.சுவாமிநாதன்
இந்நிலையில், அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது. 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு
இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-ஒன்றிய அரசுகளை அவமதிப்பதுமாகும். குறிப்பாக, இந்திய அரசின் உள்துறை செயலாளரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைத்திருப்பது உள்நோக்கம்கொண்டதாகவுள்ளது. இந்திய ஒன்றிய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? அவரிடம் இவர் என்ன எதிர்பார்க்கிறார்? நீதிமன்ற அவமதிப்புக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறார்? அதிகார வரம்பை மீறி இந்த மூவருக்கும் அழைப்பு அனுப்பியிருப்பது இவரே எடுத்த முடிவாகத் தெரியவில்லை.
திருப்பரங்குன்றம் பிரச்சனை
இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது. திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
இம்பீச்மெண்ட் நோட்டீஸ்
அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications