அதிமுகவில் இருந்து வந்தவர்களை சேர்த்தால்.. தவெக மீதான நம்பிக்கை போய்விடும்.. திருமாவளவன் வார்னிங்!
சென்னை: அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வது தவெக மீதான நம்பகத்தன்மையை கெடுத்துவிடும் என்று விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ்வதற்கு விசிக இடம் கொடுக்காது என்று கூறிய திருமாவளவன், அந்த நம்பிக்கையோடு நீங்கள் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய விசிக, தவெக கூட்டணியில் இணைந்து அமைச்சரவையில் இடம்பெற்றது. இதனால் திமுக மற்றும் விசிக கட்சித் தொண்டர்கள் மத்தியில் சோசியல் மீடியாவில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் வார்த்தை மோதல்கள் வலுக்க, தற்போது குன்னத்தில் இரு தரப்பும் நேரடியாகவே மோதி இருக்கின்றன. இது இரு கட்சிகளின் தலைமைக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்னொரு பக்கம் அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உடனடியாக தவெகவில் ஐக்கியமாகி இருக்கின்றனர். இதற்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், குன்னத்தில் நடந்த திமுக - விசிக மோதல் கவலை அளிக்கிறது. சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.
இதுபோன்ற சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும். சோசியல் மீடியாவில் வரும் கருத்துக்களுக்கு விசிகவினர் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். இதுபோல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதை அறிந்து, அதை தவிர்க்க வேண்டும் என்று நான் அறிவுறுத்தி இருந்தேன். நான் சொன்ன தகவல் கிடைத்த தோழர்கள் ஆர்ப்பாட்டத்தை தவிர்த்துவிட்டார்கள்.
தகவல் கிடைக்காதவர்கள் அந்த இடத்தில் கூடி இருக்கிறார்கள். அப்போது திமுகவைச் சேர்ந்தவர்களும் அங்கே கூடியதால், விரும்பத்தகாத நிகழ்வு நடந்துள்ளது. இனிமேல் இப்படி நடப்பதற்கு கட்சியினர் இடம் கொடுத்துவிடக் கூடாது என்று சொல்லி இருக்கிறேன். தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவுக்கு நெருக்கடி உள்ளது என்று கூறி இருந்தேன்.
அதன்படி இப்போது மிகப்பெரிய நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் கட்சியில் இணைத்துக் கொள்வது தவெகவின் நம்பகத்தன்மையை பாதிக்கும். இது ஆரோக்கியமான அரசியலுக்கு உகந்தது அல்ல. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு தவெக ஆதரவு அளிக்க கூடாது.
பாஜக உடனான கூட்டணியில் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால், அக்கட்சியுடன் இணைந்து தவெக ஆட்சி அமைத்திருக்கும். 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் நீடிப்போம். அந்த நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். எந்த சூழலிலும் தவெக ஆட்சி கவிழ இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு தவெக நிர்வாகிகள் ஆட்சியை திறம்பட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications