பாஜகவை விரட்டி அடிச்சிட்டாங்க.. அதிமுக இப்பவாச்சும் உஷார் ஆகணும்.. திருமாவளவன் பேச்சை கவனிச்சீங்களா?
சென்னை : கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதோடு அதிமுக இப்போதே புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவுக்கு பலவீனம் தான் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடைபெற்ற நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி 130 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் இதுவரை 25 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக 104 சீட்களில் வென்றிருந்தது. இந்நிலையில், இன்றைய முடிவுகளின்படி, பெருவாரியான தொகுதிகளை பாஜக இழந்துள்ளது பாஜக தலைவர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், "கர்நாடக தேர்தலில் மக்கள் பாஜகவினரை விரட்டி அடித்துள்ளனர். ஹிஜாப் விவகாரம், இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு ரத்து போன்றவற்றால் கடந்த தேர்தலை விட 30 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது.
பாஜகவினர் வழக்கம்போல் குதிரை பேரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயல்களை செய்வார்கள். காங்கிரஸ் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டுக்கோப்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." எனத் தெரிவித்தார்.
அதோடு அதிமுகவுக்கும் அட்வைஸ் கொடுத்த திருமாவளவன், "அதிமுக இப்போதே ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். பாஜகவுடன் சேர்வதால் அதிமுகவிற்கு எந்த ஒரு வலிமையும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக தொய்வுதான் அடையும்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications