ஜெயலலிதாவின் போர் குணம்தான் தேவை! காயத்ரி ரகுராமுக்கு திருமாவளவன் அறிவுரை.. பரிசளித்த புத்தகம் என்ன?
ஜெயலலிதாவின் போர் குணம் பொது வாழ்வுக்கு ஒவ்வொரு பெண்ணுக்கு தேவை- திருமாவளவன்
சென்னை: உலக வரலாற்றில் பெண்கள் எனும் நூலை நடிகை காயத்ரி ரகுராமுக்கு விசிக தலைவரும் சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் பரிசாக அளித்தார்.
நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து பல்வேறு பதவிகளை பெற்றார். இவர் வெளிநாடு வாழ் தமிழர் மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் பதவிகளையும் வகித்தார்.
தமிழ் கலாச்சார பிரிவு பதவியை வகித்த போது காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு காயத்ரி ரகுராமுக்கு பாஜக தலைவர் அழைப்பு விடுக்கவில்லை என்பதால் சிறிது அதிருப்தி அடைந்தார்.

டெய்சி சரண்
இதையடுத்து அவர் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா சிவா பேசிய உரையாடல் ஆடியோ வெளிவந்தது. இதை எதிர்த்து காயத்ரி ரகுராம் குரல் கொடுத்தார். இதையடுத்து அக்கட்சியிலிருந்து அவர் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து காயத்ரி அண்ணாமலை மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். தொடர்ந்து அண்ணாமலை 150 நிர்வாகிகள் முன்து துபாய் ஹோட்டலில் காயத்ரி என்ன செய்தார் என தவறான பொருள்படும்படியான கருத்தை சொன்னதாக காயத்ரி குற்றம்சாட்டினார்.

காயத்ரி ரகுராம்
தன்னை எப்படி அவதூறு பேசலாம் என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் காயத்ரி ரகுராம் மீது அண்ணாமலை வார்ரூமில் இருந்து நிர்வாகிகள் அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார். இந்த நிலையில்தான் காயத்ரி ரகுராம் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வந்ததும் அண்ணாமலையை நேருக்கு நேர் தன்னுடன் போட்டியிட காயத்ரி அழைத்தார்.

விமானம்
மேலும் விமானத்தில் அவசர வழி கதவை திறந்ததாக கூறப்படும் விவகாரம் குறித்தும் காயத்ரி கருத்துகளை பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் கட்சியை விட்டு விலகிய காயத்ரி செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் வேறு கட்சியில் இணைவீர்களா என கேட்டதற்கு நிச்சயம் மக்கள் பணியாற்ற ஒரு கட்சியில் இணைந்து பணியாற்றுவேன்.

விசிக
அந்த கட்சி விசிகவாக இருக்கலாம், திமுகவாக இருக்கலாம் என சில கட்சியின் பெயர்களை அவர் தெரிவித்தார். இதையடுத்து அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் திடீரென அம்பேத்கர் திடலில் திருமாவளவன் எம்பியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது அண்ணாமலைக்கு எதிராக தான் தொடங்கவிருக்கும் சக்தி யாத்திரை குறித்து திருமாவிடம் விளக்கினார்.

திருமாவளவன் ட்விட்டர்
இதுகுறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அம்பேத்கர் திடலுக்கு வந்த
காயத்ரி ரகுராம் அவர்களுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்.

ஜெயலலிதாவின் போர் குணம்
கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராம் அவர்களை வரவேற்றுச் சிறப்பித்தோம். ஏப்-14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் அவர் தொடங்கவிருக்கும் சக்தியாத்ரா வெற்றிபெற வாழ்த்தினோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். அதிமுகவுடனும் அதன் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மீது ஒவ்வொரு கட்சிக்கு கருத்து மாறுபாடு இருக்கலாம்.
ஆனால் தைரியம், போர் குணம், வீரபெண்மணி என கட்சி வித்தியாசமின்றி பாராட்டி வருகிறார்கள். மாற்று கட்சியில் இருக்கும் பெண்கள் ஜெயலலிதாவை பார்த்துதான் அரசியலுக்கு வந்தோம் என சொல்லும் அளவுக்கு அவர் திறமையான சக்தியாக விளங்கியுள்ளார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.












Click it and Unblock the Notifications