அவர் வருவாரா? விசிகவை கூட்டணிக்கு இழுக்கும் அதிமுக.. திருச்சியில் திருமாவுடன் மீட்டிங் போட்ட மாஜி.!
சென்னை: அதிமுக பாஜக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கூறியிருந்தனர். இந்த நிலையில் திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்ற நிலையில் அதிமுக கூட்டணிக்கு விசிகவை இழுக்க முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
2026 தேர்தலுக்கு தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் தயாராகி வருகிறது. ஆளும் கட்சி ஆன திமுக தமிழகத்தில் முதன்முறையாக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
அதே நேரத்தில் அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைக்க போராடி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தலைமையற்ற பிறகு சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படியாக இரு கட்சிகளும் தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. திமுகவை பொருத்தவரை கூட்டணி வலுவாக இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். மேலும் கூட்டணியில் இருக்கும் கட்சிகளும் அதையே சொல்லி வருகின்றன. தற்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஈஸ்வரனின் கொமதேக உள்ளிட்ட கட்சிகளும் சில அமைப்புகளும் இருக்கின்றன.
அதிமுக கூட்டணியை பொறுத்தவரை பாஜக தான் அதிகாரப்பூர்வமாக இணைந்து இருக்கிறது. கூடுதலாக ஜி கே வாசனின் தமிழ் மாநில காங்கிரசும் இருக்கிறது. அந்த கட்சி கூட்டணிக்கு பாமக, தேமுதிக, புதிய தமிழகம், ஐஜேகே, ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் வரலாம் என கூறப்படுகிறது. மேலும் ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவின் ஆதரவும் இருக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் யாரும் வெளிப்படையாக இதுவரை ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். மேலும் சில கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் சுமார் அரை மணி நேரம் சந்தித்து பேசி இருப்பது சற்றே லேசான சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருச்சியில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி திருமாவளவன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. தொடர்ந்து கட்சியின் பொதுக்கூட்டமும் நடைபெற்ற நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரான வைகை செல்வன் திருமாவளவனை தனியாக சந்தித்து பேசி இருக்கிறார். மேலும், தான் எழுதிய புத்தகத்தையும் திருமாவளவனுக்கு பரிசளித்தார். இதை அடுத்து இருவரும் தமிழ்நாடு அரசியல் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அரை மணி நேரத்திற்கு மேலாக பேசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் அதிமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை இணைக்க முயற்சியா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை என கூறப்பட்டாலும் சில கட்சிகள் அதிருப்தியில் இருக்கின்றன. திமுகவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலர் சண்முகம் வெளிப்படையாக பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு கிடைக்காததால் மதிமுக ஆத்திரத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே 2026 தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட முழக்கங்களை விசிக எழுப்பி வருகிறது. இப்படியான சூழலில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அதிமுக முன்னாள் அமைச்சரை திருமாவளவன் சந்தித்து பேசி இருப்பது பலத்தை எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் திருமாவளவன் கூட்டணிக்கு சம்மதிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. அதே நேரத்தில் இது அரசியல் நாகரீகத்தின் அடிப்படையில் எதார்த்தமாக நடைபெற்ற சந்திப்பு என்கின்றனர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.












Click it and Unblock the Notifications