அதிமுக மீது திடீர் அக்கறை.. பாஜக மீது விமர்சனம்.. திமுக கூட்டணியிலிருந்து விலகுகிறாரா திருமாவளவன்?
திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறேனா திருமாவளவன் பதிலை பாருங்க
செங்கல்பட்டு: திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவில் இணைகிறேனா என்பது குறித்து கேட்ட கேள்விக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
பாஜகவில் இருந்து பலர் விலகி அதிமுகவில் இணைவதால் இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படுவதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
எனினும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோ அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில் தமிழகத்தில் அதிமுகவை பயன்படுத்தி பாஜக வளர்கிறது.

அதிமுக தவிர்க்க வேண்டும்
எனவே பாஜகவை அதிமுக தவிர்க்க வேண்டும். அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்கிறது. அதிமுக இல்லாவிட்டால் அந்த 4 எம்எல்ஏக்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். பாஜக கூட்டணியில் இனியும் அதிமுக தொடர்ந்தால் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டிய நிலை அதிமுகவுக்கு ஏற்படும். அதிமுகவுக்கு பாஜகவால் எந்த பலனும் இல்லை. இனியும் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை தொடர்வது நல்லதல்ல என தெரிவித்திருந்தார்.

எஸ் ஆர் சேகர்
இதற்கு பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் கூறுகையில் திமுக கூட்டணியில் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும் திருமாவளவன் அதிமுக கூட்டணியை விமர்சிக்கலாமா? சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. அதிமுக எத்தனை பெரிய கட்சி எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்துள்ளார், அவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு இவரது கட்சி உயர்ந்துவிட்டதா?

முதுகில் சவாரி
இவரது கட்சிதான் திமுகவின் முதுகில் சவாரி செய்துக் கொண்டிருக்கிறது. இவரது கட்சிக்கு இருப்பதே ஒரே ஒரு எம்பி, எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. இதில் எங்கள் கட்சியை விமர்சிக்கிறாரா. எங்கள் கட்சிக்கு தமிழகத்தில் 4 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சிதான் நடைபெறுகிறது. மத்தியிலும் எங்கள் ஆட்சிதான். எங்கள் கட்சி யாருடைய முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. திருமாவளவன் செய்வது வெறுப்பு அரசியல் என கடுமையாக விமர்சித்தார்.

அரசியல் நிபுணர்கள்
இதுகுறித்து அரசியல் நிபுணர்கள் கூறுகையில் திமுக கூட்டணிக்கு பாமக வந்துவிட்டால் அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியால் இருக்க முடியாது என்பதால் அதிமுகவில் இணைய திருமாவளவன் இவ்வாறு பேசி வருகிறார். பாமக, பாஜக இருக்கும் கூட்டணியில் விசிக இருக்காது என கூறியிருந்த நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவை வெளியேற்ற முயற்சித்து இப்படி பேசிவருகிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்த போதே திருமாவளவன் முதல் ஆளாக போய் வாழ்த்து தெரிவித்தார். அப்போது பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றுவது போன்ற ஒரு கருத்தை அவர் தெரிவித்தார் என தெரிவித்தனர்.

படத்திறப்பு விழா
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே நடந்த படத்திறப்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கவும் அம்பேத்கர் வழியை பின்பற்ற அமைப்பாய் திரள்வோம். சேரிப் பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி உள்ளே நுழைய பார்க்கிறது. அவர்களை கட்சி கொடியேற்ற அனுமதிக்காதீர். அதிமுகவிற்கு ஆலோசனை சொல்வதற்கு நான் ஆலோசகர் இல்லை, ஆனால் அதிமுக முதுகில் பாஜக சவாரி செய்ய நினைக்கிறது. பாஜக தமிழகத்தில் வளர்ந்தால் அதிமுக நீர்த்து போய்விடும். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர உள்ளதாக சிலர் நெருப்பு அள்ளி வீசுகிறார்கள் எனவும் விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications