தமிழகம் + புதுச்சேரி.. 10 தொகுதிகள் ஒதுக்குங்க.. ஸ்டாலினை வீட்டில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார். இந்த ஆலோசனையின் போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடக்கும் சட்டசபைத் தேர்தல்களில் சேர்த்து இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமார் ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சிபிஎம், விசிக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் முடிக்கப்படவில்லை. குறிப்பாக விசிகவுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதில் அக்கட்சியினர் பிடிவாதமாக இருக்கின்றனர்.

இதனிடையே திமுக கூட்டணியில் கூடுதலாக சில கட்சிகள் இணைந்ததால், விசிகவுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி வந்தார். இதன்பின் விசிக - திமுக இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்படியான சூழலில் முதல்வர் ஸ்டாலினின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சிக்கு பின் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் அழைத்து பேசி வருவது விசிகவுடன் மட்டும்தான். இந்த ஆலோசனையின் போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் திருமாவளவன் இடையில் பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டிருக்கின்றன. இறுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநில சட்டசபைத் தேர்தலிலும் சேர்த்து 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று திருமாவளவன் கோரி இருக்கிறார்.
இதனால் தமிழ்நாட்டில் 7 மற்றும் புதுச்சேரியில் 3 தொகுதிகளை ஒதுக்கலாமா என்ற ஆலோசனையில் திமுக தலைமை இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு 4ல் வெற்றி பெற்றது. இம்முறை 8 தொகுதிகள் வரை ஒதுக்க திமுக ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் தேமுதிக புதிதாக வந்திருப்பதால், அவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சிபிஎம் கட்சியும் 6 தொகுதிகளுக்கு கீழ் குறைய முடியாது என்று பிடிவாதமாக இருக்கிறது. நாளைக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான அத்தனை பணிகளையும் முடிக்க ஸ்டாலின் தீர்மானித்திருப்பதால், திருமாவளவனுடன் நேரில் சந்திப்பு நடத்தி இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications