'இதுதான் உண்மையான மாற்றம்'.. தமிழக அரசின் நடவடிக்கையை பாராட்டிய ஐகோர்ட்!
மதுரை: புதுக்கோட்டை அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்றக் கோரிய வழக்கில், 3 மாதத்திற்குள் சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ததை மதுரை ஐகோர்ட் பாராட்டியுள்ளது. இது தான் உண்மையான மாற்றம் எனவும், தமிழக அரசின் செயல்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது.. இந்த நிலை தொடர வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
வழக்குகளில் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக பதில் மனு தாக்கல் செய்வது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் இந்த செயல்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது எனவும் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், புகழேந்தி பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கு
புதுக்கோட்டை மாவட்டம் குமாரமங்கலம் அருகே நீர்நிலைப் பகுதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தார் சாலையை அப்புறப்படுத்துமாறு மாத்தூரை சேர்ந்த காசிராஜன் என்பவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், நீர் நிலை புறம்போக்கு இடங்களில் அரசு, தனியார் நிறுவனம் எந்த கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்ற உத்தரவு உள்ளது.
ஆனால் புதுக்கோட்டை குமாரமங்கலம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலான பெரியகுளம் நீர்நிலையை ஆக்கிரமித்து, தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமில்லாமல், நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோத கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. மேலும் வீட்டுமனைகளாகப் பிரித்து இடம் விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு சில உள்ளூர் அதிகாரிகளின் துணையுடன் போலிப் பட்டாக்கள் பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதுதான் உண்மையான மாற்றம்
இந்த வழக்கானது நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மற்றும் சட்டவிரோதமாகப் போடப்பட்ட தார்ச்சாலைகளை 3 மாதங்களுக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீர்நிலை ஆக்கிரமிப்புகளைத் தாங்களாகவே முன்வந்து அகற்ற உள்ளதாகவும், இதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது.
தமிழக அரசு தாமாக முன் வந்து பதில் மனு தாக்கல் செய்ததை கண்டு நீதிபதிகள் வியப்படைந்தனர். மேலும் தமிழக அரசை பாராட்டினர். நீதிபதிகள் கூறுகையில், "நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலே காலம் தாழ்த்தி தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு தாமாகவே முன்வந்து நடவடிக்கை எடுப்பதாக பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வழக்குகளில் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக பதில் மனு தாக்கல் செய்வது பாராட்டுக்குரியது.
தமிழக அரசின் இந்த செயல்பாடு வியப்பை ஏற்படுத்துகிறது மிகவும் பாராட்டத்தக்கது.
இதுதான் உண்மையான மாற்றம். இந்த நிலை தொடர வேண்டும்" என்று நீதிபதிகள் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.














Click it and Unblock the Notifications