நிதிஷ்குமார் ஒன்றும் கிங்மேக்கர் இல்லை! பீகாரில் ஜனதா தளம் சின்ன கட்சிதான்!
சென்னை: நிதிஷ்குமார் ஒன்றும் கிங் மேக்கர் இல்லை என்று காங் எம்.பி. திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.
'இந்தியா' கூட்டணியைவிட்டு நிதிஷ்குமார் விலகியது நாடு முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறி இருக்கிறது.

ஆனால், இந்தச் சூழ்நிலையில் அவர் ஒன்று தேசிய தலைவர் இல்லை என்றும் கிங் மேக்கர் இல்லை என்றும் காங். எம்.பி திருநாவுக்கரசர் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியா கூட்டணி உடையும் என்பது எங்களுக்கு முன்பே தெரியும் என்றும் ஒரு அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
"எப்போது 'இந்தியா' கூட்டணி உருவாக்கப்பட்டதோ அப்போதே இந்த மாதிரியான விசயங்கள் எல்லாம் எதிர்ப்பாக்கப்பட்டதுதான். இந்தக் கூட்டணிக்கு வந்தவர்கள் எல்லோரும் அப்படியே தொடர்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதற்கான சூழல் இருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிந்த உண்மைதான்.
உதாரணமாகச் சொன்னால், கேரளா. அங்கே கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்தான் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சியாக இருக்கின்றன. மொத்தம் 20 எம்.பி சீட்டுகள் அங்கே உள்ளன.

இந்த இரண்டு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருக்கின்றன. எனவே இருவரும் ஆளுக்கு தலா 10 இடங்கள் எனப் பிரித்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆகவே, அங்கே தேர்தலில் இரண்டு கட்சிகளும் தனித்தனியாகத்தான் நிற்பார்கள். வேறு வழியில்லை. யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கிறதோ அதை வைத்து பிறகு கூட்டணிக்கு முயற்சிகள் நடக்கும். அதுதான் அரசியல் யதார்த்தம்.
'இந்தியா' கூட்டணியை இரண்டு விதமாகப் பார்க்க வேண்டும். ஒன்று திமுக, காங்கிரஸ் போலப் பலமான கூட்டணி. இங்கே காங்கிரஸும் திமுகவும் தேர்தல் வருவதற்கு முன்பே இணைந்தே இருக்கிறோம்.
அதன் தொடர்ச்சியாகத் தேர்தலில் போட்டிப் போடுகிறோம். இன்னும் ஒரு படி முன்னதாக தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ராகுல்காந்திதான் பிரதமர் என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவிக்கிறார். அதன்படி செயல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இது ஒருவிதம்.

இதைப்போலவே கேரளா கூட்டணியும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. மேற்கு வங்கமும் பஞ்சாப் கூட அப்படித்தான். கூட்டணி அமைக்கும் போது சீட் எண்ணிக்கை சார்ந்து பிரச்சினை வரும் என்பது எங்களுக்குத் தெரியும்.
இந்த மாநிலக் கட்சிகள் தருகின்ற சீட்டுகளை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் தேர்தலைச் சந்திக்க முடியாது. அப்படி என்றால் தேர்தலே தேவையில்லை.
மாநிலக் கட்சிகள் வலிமையாக உள்ள இடங்களில் காங்கிரஸ் தரப்படுகின்ற குறைவான இடங்களை ஏற்றுக் கொண்டுதான் நிற்கிறோம். காங்கிரஸ் இந்திய அளவில் தேசிய கட்சி.
ஆனால், தமிழ்நாட்டில் திமுகதான் பெரிய கட்சி. அதை உணர்ந்ததால்தான் குறைவான இடங்களைப் பெற்றுக்கொண்டு போட்டியிடுகிறோம்.
அதைப்போன்று அகிலேஷ் யாதவ். அங்கு மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. அவ்வளவு இடங்கள் உள்ள இடத்தில் காங்கிரசுக்கு 10 சீட்டுகள்தான் கொடுத்திருக்கிறார்கள். அதை ஏற்றுக் கொண்டுதான் நிற்கிறோம்.

இன்னும் சொல்லப்போனால், மம்தா அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிட்டேன் என்று அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மி கூட இன்னும் அப்படியான முடிவை எடுக்கவில்லை. இன்னும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காங்கிரஸ் இந்தியாவை 50 ஆண்டுகள் ஆண்ட கட்சி. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் அதன் இலக்கு. அப்படி இருக்கும்போது எல்லா மாநிலங்களிலும் குறைந்த சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டால், காங்கிரஸ் எப்படி ஆட்சி அமைக்க முடியும்.
மோடி ஆட்சிக்கு வருவதைத் தடுக்கவேண்டும் என்பது பொது நோக்கம். அப்படி என்றால், அனைத்து கூட்டணிகளும் தியாகம் செய்ய வேண்டும். காங்கிரஸ் மட்டுமே தியாகம் செய்ய முடியாது.
நிதிஷ்குமார்தான் 'இந்தியா'கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் எனப் பேசப்பட்டவர். அவர் செயல்பாடு சரியில்லை என்கிறார். இந்தக் கூட்டணிக்காக அவரது செயல்பாடு என்ன? அது மிகப்பெரிய சந்தேகமாக உள்ளது. 'இந்தியா' கூட்டணிக்குள் இருந்துகொண்டே வேறு கட்சியுடன் பேரம் பேசிக்கொண்டிருந்தார்.
'இந்தியா' கூட்டணியை வலுவாக்குவதற்காக அவர் எந்தெந்த தலைவர்களைப் போய் சந்தித்தார்? எத்தனை மாநிலங்களுக்குப் பயணம் செய்தார்? பீகாருக்கு உள்ளாகவே 45 சட்டமன்ற உறுப்பினர்களைவைத்துக்கொண்டு தேசிய அரசியலைப் பற்றி கனவுக் கண்டு கொண்டிருந்தால், அது யாருடைய பிரச்சினை?
ஒரு மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முதலமைச்சர்தான். ஆனால், இவர் கடந்த 3 ஆண்டுகளில் 3 முறை முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். இன்னும் 2 வருட ஆட்சி இருக்கிறது. அதற்குள் 2 முறை கூட்டணி மாறுவார் அவர்.
நிதிஷ் கூட்டணியைவிட்டுச் சென்றுவிடுவார் என முன்பே லல்லு பிரசாத்திற்கே தெரியும். அவர் கார்கேவை முன்னே எச்சரித்திருக்கிறார். அதை கார்கே கூட வெளிப்படையாகப் பேசி இருக்கிறாரே?
'இந்தியா' கூட்டணி என்பது ஏதோ நிதிஷ்குமாரை நம்பி மட்டுமே உருவாக வில்லை. அவர் கட்சியும் இந்தியா முழுமைக்கு உள்ள கட்சியும் அல்ல. அவரது கட்சி மாநிலத்திலேயே கூட சின்ன கட்சிதான். அவர் தேசிய தலைவர் ஒன்றும் இல்லை. பாஜகவைப் பயன்படுத்தி ஒருமுறை முதல்வர் ஆகிறார்.
அடுத்து அகிலேஷ் யாதவை பயன்படுத்தி முதல்வர் ஆகிறார். இவரைத் துண்டு சீட்டாக இருகட்சிகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. இவர் ஏதோ கிங்மேக்கர் என நினைத்துக் கொண்டு அவரே கிங் ஆகச் செயல்படுகிறார் " என்கிறார்












Click it and Unblock the Notifications