திருப்பரங்குன்றம் விவகாரம்.. விஜய் கட்சியின் நிலைப்பாடு என்ன? சிடிஆர் நிர்மல் குமார் விளக்கம்!
சென்னை: திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தவெக அமைதி காக்கிறது என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் தமிழக அரசு தவறான வாதங்களை முன் வைத்ததாக கூறிய சிடிஆர் நிர்மல் குமார், அரசே ஒரு அசாதாரண சூழலை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மற்றும் இந்துத்துவ அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றனர். தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு 144 தடை உத்தரவு அமல்படுத்தி தடுத்து நிறுத்தியது. தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

தமிழக அரசின் நடவடிக்கையை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வருகின்றன. ஆனால் அதிமுக தீபத்தூணில் தீபம் ஏற்றும் நீதிபதியின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கூறியது. இது இஸ்லாமியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை.
தவெகவின் நிலைப்பாடு என்னவென்று தெரியாததால், அக்கட்சியினரும் அமைதி காத்தனர். புதுச்சேரியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விஜய் வாய் திறக்கவில்லை. இதனால் தவெக மீது விமர்சனங்கள் அதிகரித்தன. எப்படி கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலைக்கு விஜய் வாய் திறக்கவில்லையோ, அதுபோல் திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் பேசவில்லை என்றனர்.
இந்த நிலையில் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டு 3 நாட்கள் வரை தமிழக அரசு ஏன் காத்திருந்தது?
அடுத்ததாக தமிழக அரசு வழக்கறிஞர் 6 மணி வரை நேரம் இருக்கிறது.. தீபம் ஏற்றுவோம் என்று நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார். தமிழக அரசுதான் அசாதாரண சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. பாரம்பரிய முறைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, நாங்கள் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தோம். இப்போதும் நீதிமன்றத்தில்தான் வழக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications