மாரிமுத்துவின் மண் வாசனை அரசியல்.. திருத்துறைப்பூண்டியில் 13வது முறை சிவப்புக் கொடி.. அதிமுக கதி?
சென்னை: எத்தனையோ கட்சிகள் மாறினாலும், திருத்துறைப்பூண்டி மண்ணில் மட்டும் "சிவப்பு" வண்ணம் மாறவே இல்லை. தவெக-வின் கடும் போட்டி, அதிமுக-வின் பின்னடைவு எனப் பல திருப்பங்களுக்கு மத்தியிலும், மாரிமுத்து மீண்டும் வாகை சூடியது எப்படி? அரை நூற்றாண்டு கால கம்யூனிஸ்ட் கோட்டை தகர்க்க முடியாத பின்னணி என்ன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தின் திருத்துறைப்பூண்டி என்றாலே, தமிழக அரசியல் வட்டாரத்தில் சட்டென நினைவுக்கு வருவது 'சிவப்புக் கொடி' தான். மற்ற தொகுதிகளில் அலை வீசலாம், ஆட்சி மாற்றங்கள் வரலாம். ஆனால், இந்தத் தொகுதியின் முடிவை மட்டும் அங்கிருக்கும் டீக்கடைகளிலும், வாய்க்கால் வரப்பு ஓரங்களிலும் ரொம்பவே ஈஸியாக சொல்லிவிடுவார்கள்.

1962-ல் தொடங்கிய அந்த பழக்கம், இதோ 2026-லும் ஒரு மாற்றமும் இல்லாமல் அப்படியே தொடர்கிறது. 13-வது முறையாகத் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிக் கொடியை நாட்டித் தனது கோட்டையைத் தக்கவைத்துள்ளது.
13-வது முறையாக சிவப்புக் கோட்டை
இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் மீண்டும் களம் கண்ட சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து, 74,062 வாக்குகள் பெற்று 12,922 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது முறையாக அபார வெற்றி பெற்றுள்ளார். இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பாண்டியன் 61,140 வாக்குகள் வாங்கி செம டஃப் கொடுத்தார்.
ஆனால், அதிமுகவோ வெறும் 43,073 வாக்குகளோடு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு பரிதாபமாக நிற்கிறது. தேர்தல் வரலாற்றில் அதிமுக ஒருமுறை கூட ஜெயிக்காத தொகுதி என்ற கசப்பான வரலாறு இந்த முறையும் மாறவில்லை.
மாரிமுத்து பக்கம் திருத்துறைப்பூண்டி
ஏன் திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட்கள் மட்டும் இன்னும் ஜெயிக்கிறார்கள் தெரியுமா? இதற்கு பின்னால் அரை நூற்றாண்டு கால போராட்ட வரலாறு இருக்கிறது. "அவங்க எப்பவும் இங்கேயே இருக்காங்க" என்பதுதான் மக்களின் ஒரே பதில்.
இது தேர்தல் நேரத்து கும்பிடு போடும் அரசியல் கிடையாது. ஒரு கூலி விவசாயிக்குக் கூலி உயர்வுப் பிரச்சனை என்றாலும், கடைமடைக்குத் தண்ணீர் வரவில்லை என்றாலும் முதலில் கொடியைப் பிடித்துக் கொண்டு களத்திற்கு வருவது கம்யூனிஸ்ட் கட்சியினர்தான். அதுவும் மாரிமுத்து போன்ற எளிய மனிதர்களை வேட்பாளராக நிறுத்தும்போது, மக்கள் அவர்களைத் தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.
அதிமுக-வால் ஏன் தகர்க்க முடியவில்லை
தொகுதி உருவான நாளில் இருந்தே திருத்துறைப்பூண்டிக்கும் அதிமுகவுக்கும் ஏழாம் பொருத்தமாகத்தான் இருக்கிறது. 2011-ல் உலகநாதன், 2016-ல் திமுகவின் அடலரசன், 2021-ல் மாரிமுத்து என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போனாலும், அதிமுகவால் மட்டும் இங்கு ஒரு ஓட்டை கூட போட முடியவில்லை.
இப்போதைய நிலவரப்படி இத்தொகுதியில் 2.26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் தான் (1,15,267) அதிகம். இந்த பெண் வாக்காளர்களின் ஆதரவுதான் மாரிமுத்துவை மீண்டும் கரை சேர்த்திருக்கிறது.
எளிய தோழர் மாரிமுத்து - சிவப்புகொடி
இந்தத் தேர்தலில் அதிமுகவின் கோட்டைக்குள் தவெக புகுந்துவிட்டது அப்பட்டமாக நமக்கு தெரிகிறது. அதிமுகவின் ஓட்டுகள் அப்படியே தவெக-வுக்குச் சிதறிப்போயிருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரிய எச்சரிக்கை மணி என்றே சொல்லலாம்.
தவெக 2ம் இடத்தைப் பிடித்திருப்பது அதிமுகவின் எதிர்கால அரசியலை இத்தொகுதியில் கேள்விக்குறியாக்கிவிட்டது. எத்தனையோ மாற்றக் காற்று வந்தாலும், திருத்துறைப்பூண்டியில் மட்டும் "உழைப்பாளி பக்கம் தான் ஓட்டு' என்று மக்கள் இன்னும் பிடிவாதமாக உள்ளனர்.. அதுதான் இங்க சிவப்புக் கொடி இன்னும் கீழே இறங்காம இருக்கக் காரணம்...!!!













Click it and Unblock the Notifications