கும்மிடிப்பூண்டி வீட்டில் கோடிகளில் பணம், தங்கம்.. எக்கு தப்பான வேலை பார்த்த எதிர்வீட்டு இளம் பெண்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ராஜேஷ்வரி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சென்னை முதல் கும்மிடிப்பூண்டி வரை சொந்தமாக வீடுகள் மற்றும் கடைகள் உள்ளன. பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ராஜேஸ்வரிக்கு உள்ளதாம். இந்நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரிக்கு எதிர்வீட்டு இளம் பெண் சுப்பிரியவால் என்ன நடந்தது தெரியுமா? வீட்டில் இருந்த தங்கம், பணத்தை திருடி இருக்கிறார்.. அவர் சிக்கியது எப்படி என பார்ப்போம்.
இன்றைக்கு வயதானவர்களை தனியாக வசித்தால் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை பெற்றோர்களை தனியாக விடாமல் பிள்ளைகள் பார்த்துக் கொள்ள வேண்டும். என்னதான் கோடிகளில் சொத்து இருந்தாலும், கவனிக்காமல் இருந்தால், அந்த பணத்தால் எந்த பயனும் இல்லை. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.

பல கோடி சொத்துக்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் அருகே சொந்த வீட்டில் 87 வயதாகும் ராஜேஸ்வரி என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். மூதாட்டி ராஜேஸ்வரிக்கு சென்னை மற்றும் கும்மிடிப்பூண்டி சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் சொந்தமாக வீடுகள் மற்றும் கடைகள் இருக்கிறது. பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு உரிமையாளராக இருக்கிறாராம்.
ராஜேஸ்வரிக்கு என்னாச்சு
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி மதியம் 3 மணி அளவில் மூதாட்டி ராஜேஸ்வரி மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் வசிக்கும் அவரது உறவினர்கள், உடனடியாக மூதாட்டியை மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவத்தில் மூதாட்டியின் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவை திருடு போனது உறவினர்களுக்கு தெரியவந்தது.
85 லட்சம் ஒப்படைப்பு
இந்த சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதே சமயத்தில் சம்பவம் நடந்த வீட்டில் இருந்து ரொக்கப்பணம் ரூ 85 லட்சத்து 60 ஆயிரத்தை போலீசார் கைப்பற்றி வருவாய் துறையினர் முன்னிலையில் மூதாட்டியின் சென்னையை சேர்ந்த உறவினர்களிடம் ஒப்படைத்தார்கள்.
தனிப்படையிடம் சிக்கிய சுப்ரியா
இந்த வழக்கில் புது கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த பாட்டியின் எதிர்வீட்டில் வசிக்கும் 20 வயதாகும் இளம்பெண் சுப்ரியா என்பவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டு போன நகைகள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம். திருமணமாகி 4 மாத ஆண் குழந்தை மற்றும் கணவருடன், புது கும்மிடிப்பூண்டியில் வாடகை வீட்டில் சுப்ரியா வசித்து வந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் இருந்த மூதாட்டி ராஜேஸ்வரியிடம் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
10 ஆயிரம் கடன்
இந்த நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி ராஜேஸ்வரி வீட்டிற்கு சுப்பிரியா சென்று கடனாக ரூ.10 ஆயிரம் கேட்டாராம். அதனை மூதாட்டி தர மறுத்த நிலையில் மூதாட்டி ராஜேஸ்வரியை தாக்கி அவரை சுப்ரியா கீழே தள்ளினாராம். இதில் மூதாட்டி ராஜேஸ்வரியின் மண்டை உடைந்தது. அவர் உடனே மயங்கி விழுந்துள்ளார்.
20 சவரன் தங்கம்
இதைத்தொடர்ந்து பட்டப்பகலில் வீட்டில் புகுந்து பீரோவில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகியவற்றை இளம்பெண் சுப்ரியா கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இளம்பெண் சுப்ரியாவை கோர்ட்டில் நேற்றிரவு கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். கடன் தராத மூதாட்டியை தாக்கி 20 சவரன் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த எதிர் வீட்டு பெண் சுப்ரியா கைது செய்யப்பட்ட சம்பவம் கும்மிடிப்பூண்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications