திரும்பி வந்து தாக்கிய "கர்மா".. துபாய் ஹோட்டல் நியாபகம் இருக்கா? அண்ணாமலையை வறுத்தெடுத்த காயத்ரி!
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து கடுமையான விமர்சனங்களை பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காயத்ரி ரகுராம் வைத்துள்ளார்.
பாஜக தலைவர் அண்ணாமலை 4.40 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட ரபேல் எடிஷன் பெல் அண்ட் ராஸ் வாட்சை வாங்கியது எப்படி என்ற கேள்வியை ஆளும் திமுக தரப்பு எழுப்பி உள்ளது. அண்ணாமலையின் இந்த ரபேல் வாட்ச் தமிழ்நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அண்ணாமலை அளித்த விளக்கத்தில், இந்தியாவிடம் சீனா வாலாட்ட நினைக்கிறது. இதற்கு காரணம் ரபேல் விமானங்கள், ரபேல் விமானங்கள் வந்த பின் நம்முடைய போர் வியூகங்கள் மாறி உள்ளன.

விளக்கம்
நான் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமான பாகங்களை வைத்து செய்தது. ரபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்சுகளை செய்தார்கள். இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.மேலும் இந்த பில்லை ஏப்ரல் மாதம் வெளியிடுவேன். அதேபோல் திமுகவினர் சொத்துக்கள் பற்றிய விவரங்களையும் வெளியிடுவேன் என்று அண்ணாமலை கூறி உள்ளார்.

அண்ணாமலை பில்
அண்ணாமலை தனது பில் குறித்த விவரங்களை ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக கூறிய நிலையில்தான் ஊடகம் ஒன்றில் அண்ணாமலை தனக்கு வாட்ச் விவரங்களை வெளியிட மறுத்துவிட்டதாக செய்தி வெளியிட்டு இருந்தது. என்னிடம் பில் இல்லை என்று அண்ணாமலை சொல்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை அண்ணாமலை ஆதரவாளர் கார்த்திக் கோபிநாத் என்பவர் பகிர்ந்து.. அண்ணாமலை பற்றி தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்று விமர்சனம் வைத்து இருந்தார்.

காயத்ரி ரகுராம் பதிலடி
இதற்கு தற்போது காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார். அதில், அண்ணாமலை பற்றி பொய்யான செய்தி பரவினால் உங்களுக்கு அது வலிக்கிறது. அதுவே அண்ணாமலை என்னை பற்றி பொய் சொன்னால், துபாய் ஹோட்டலில் இருந்ததாக பொய் சொன்னால், 150 பேருக்கு முன் என்னுடைய கேரக்டரை அவமானப்படுத்தினால் உங்களுக்கு பிரச்சனை இல்லையா? இதை பல செய்தி நிறுவனங்கள் வேறு வெளியிட்டு இருந்தன.

பிணந்தின்னி
என்னை பிணந்தின்னி கழுகுகளிடம் வீசி எறிந்தனர். எனக்காக யாரும் நிற்கவில்லை. ஒரு பெண்ணுக்காக யாரும் நிற்கவில்லை. ஒரு சின்ன விசாரணை கூட நடத்தவில்லை. பாஜக வரலாற்றில் முதல் முறையாக ஒரு தலைவர் தனது கட்சியில் இருக்கும் பெண் உறுப்பினரை பற்றியே தவறாக பேசுகிறார். கடைசி 8 வருடங்களில் நான் இப்படி ஒரு பிரச்னையை எதிரிகொண்டதே இல்லை. இப்போது நானும், என் குடும்பமும் கடும் வலியில் இருக்கிறோம். முன்பெல்லாம் பெண்கள் அமைதியாக ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் பெண்கள் அப்படி இருக்க கூடாது.

கர்மா
இப்போது உள்ள பெண்கள் கேள்வி கேட்பார்கள். அவர்கள் சண்டை போடுவார்கள். என்னை பற்றி எத்தனை ஊடகங்களில் தவறான செய்தி வந்தது தெரியுமா? நான் துபாய் ஹோட்டலில் இருந்ததாக எத்தனை ஊடகங்கள் செய்தி வெளியிட்டன தெரியுமா? அனைத்திற்கும் அண்ணாமலைதான் காரணம் என்பது தெரியுமா? பெண்களை பற்றி பேசுபவர்கள் நல்ல தலைவராக இருக்க முடியாது. தவறான விதத்தில் கமெண்ட் அடிப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதோ இப்போது கடவுள் "கர்ம" வினையை காட்டிவிட்டார் என்று அண்ணாமலை பற்றி வந்த செய்திகள் குறித்து காயத்ரி கமெண்ட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications