மனோபாலாவுக்கு இப்படி ஒரு அரசியல் ஆர்வமா? அவர் கடைசியாக வாழ்த்து சொன்ன அரசியல் தலைவர்!யார் தெரியுமா?
சென்னை: பிரபல நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல தளங்களில் கோலோச்சிய மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாக டிவிட்டரில் அவர் போட்ட பதிவுகள் மனோபாலா அரசியலுக்கு வர தயாராகிவிட்டார் என்று பேசப்பட்டது. இந்நிலையில் அவர் கடைசியாக வாழ்த்து சொன்ன அரசியல் தலைவர் குறித்த தகவல்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஆளாக பரிணமித்தவர் நடிகர் மனோபாலா. சினிமா என்பது வெறும் ஹீரோக்களால் மட்டும் நிரப்பப்பட்டுள்ள இந்த காலத்தில் சினிமா என்பது அனைத்து கலைஞர்களையும் உள்ளடக்கிய ஒரு வண்ணமயமான மேஜிக் என்பதை வலுவாக நம்பியவர்தான் மனோபாலா. இதனை தான் தயாரித்த படங்களிலும் அடிக்கோடிட்டு காட்டியிருப்பார். மக்களின் துக்கங்களை மறக்க செய்யும் ஒரு இடமாக சினிமா இருக்க வேண்டும் என்று கருதியவர்.

தானும் முடிந்த அளவுக்கு மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்று முயன்றவர். சினிமாக்களில் மக்களை சிரிக்க வைப்பவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருப்பதில்லை என்று சொல்லப்படுவது உண்டு. அதேபோலதான் மனோபாலாவின் வாழ்க்கையும். சினிமாவில் அவர் பெரும் போராட்டங்களுக்கு இடையில்தான் நுழைந்தார். போராட்டங்களுக்கு இடையில்தான் வளர்ந்தார். 2023ம் ஆண்டில் கூட 'உருவ கேலி' சினிமாக்களில் இயல்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையில், இவர் சினிமாவுக்கு வந்த காலத்தில் உருவ கேலி உச்சத்தில் இருந்தது.
இவரு உடலை வைத்து கேலி செய்து அதன் மூலம் மக்களை சிரிக்க வைக்கும் மோசமான நடைமுறையில் வளர்ந்திருந்தார். ஆனால் மனம் தளராத முயற்சி மட்டுமே இவரை இவ்வளவு தூரத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இவர் பட்ட அடி வேறு யாருக்கும் விழுந்துவிடக்கூடாது என்பதில் மனோபாலா மிகுந்த கவனமாக இருப்பார். இதனாலேயே இவர் இயக்கும் படங்களில் உருவ கேலி கட்டாயமாக தவிர்க்கப்பட்டிருக்கும். பொதுவாக சினிமாகாரர்களுக்கும் அரசியலுக்கும் வெகு தொலைவு இருக்கும். அதாவது தொடர்பு இருந்தால் அது வெளிப்படையாக இருக்கும். அவர்கள் தங்களுக்கு பிடித்த கட்சிக்காக பிரசாரத்தை கூட மேற்கொள்வார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி விஜயகாந்த் வரை பலர் வெளிப்படையாக தனக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள உறவை வெளிப்படுத்திக்கொள்வார்கள். ஆனால் சிலர் அரசியல் குறித்து வாய் திறக்காமல் மௌனமாக இருந்துவிடுவார்கள். அந்த வகையில் மனோபாலா சற்று வித்தியாசமானவர். இவர் முதன் முதலாக ஒரு அரசியல் தலைவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் எனில் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குதான். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது வாழ்த்து கூறியிருக்கிறார்.
அதேபோல இவர் கடைசியாக வாழ்த்து சொன்ன அரசியல் தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான். இதன் மூலம் தமிழக அரசியல் கட்சிகளிடையே இவருக்கு இருக்கும் ஆர்வம்/ஆதரவு என்ன என்பது வெளிப்படையாக தெரிய வந்தது. இப்படியான வாழ்த்து செய்திகள் வெளிவந்த பின்னர் இவர் திமுகவில் ஐக்கியமாகிவிடுவார் என்கிற பேச்சும் கூட அடிப்பட்டது.
ஆனால் இது குறித்து மனோபாலா வாய் திறக்கவில்லை. அவர் தனக்கென ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் சில பிரபலங்களை பேட்டியெடுத்து போட்டுக்கொண்டிருந்தார். அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று கடைசி வரைக்கும் இருந்துவிட்டார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று தன்னையும் வருத்திக்கொண்டு மக்களுக்காக நடித்த கலைஞன் நூற்றாண்டு கடந்தும் நினைவுகூரப்படுவார் என்று திரை பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications