விசிகவை சிறுமைப்படுத்த பாக்குறாங்க.. தவெகவுக்கு பாமகவினர் எப்படி ஓட்டு போடுவாங்க? திருமாவளவன்
சென்னை: விசிக இடம்பெறும் தவெகவுக்கு பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என்றும், யாருக்கும் ஆதரவு கொடுக்காத பாமகவின் வாக்குகள் அப்படியே 100 சதவீதம் தவெகவிற்கு வந்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் எனவும் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் மும்முனை போட்டி என்ற நிலை வந்துவிட்டது எனவும், பாஜகவை எதிர்ப்பதற்கு இந்தியா கூட்டணியில் திமுக சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னை அசோக்நகரில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாமக வாக்குகள் தவெகவுக்கு வந்ததா?
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. தமிழக அரசியலில் கூட்டணி அரசு என்ற நிலைப்பாட்டை எடுத்தவர் முதல்வர் விஜய். விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் மும்முனை போட்டி என்ற நிலை வந்துவிட்டது.
பொதுத்தேர்தலின் போது விசிகவின் வாக்குகள் எல்லாம் தவெகவிற்கு போய்விட்டது. இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றிக்கு பாமக தான் காரணம் என்கிறார்கள். அப்படி என்றால், தற்போது விசிகவின் வாக்குகள் திமுகவிற்கு போய்விட்டதா என்ற கேள்வி எழுகிறதே.
பாமகவினர் எப்படி வாக்களிப்பாங்க?
எனவே சமூக ஊடகங்களிலும் சரி, மற்ற விவாதங்களிலும் சரி.. விவாதிக்கக் கூடியவர்கள் விசிகவை குறி வைத்து, திமுகவோடு இருந்த போதும் அந்த அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கருதியவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இப்போது தவெகவில் அமைச்சரவையில் இடம்பெற்று இருப்பதால், விசிகவின் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்பட்டு விடக்கூடாது என்பதன் அடிப்படையில், யாருக்கும் ஆதரவு கொடுக்காத பாமகவின் வாக்குகள் அப்படியே 100 சதவீதம் தவெகவிற்கு வந்துவிட்டதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. கடந்த காலங்களில் அப்படி நடக்கவில்லை. ஆனால் இந்த தேர்தலில் மட்டும் அவர் வெளிப்படையாக தவெகவிற்கு ஆதரவு என்று அறிவிக்காத சூழலிலும் மறைமுகமாக 100 சதவீதம் அப்படியே வாக்களித்து விட்டனர் என்ற ஒரு தோற்றத்தினை ஏற்படுத்துவதற்கு காரணம் விசிகவிற்கான முக்கியத்துவத்தை குறைப்பது தான்.
அதிமுக தோல்விக்கு இதுதான் காரணம்
விசிகவை சிலர் சிறுமைப்படுத்த பார்க்கிறார்கள். வேறு எந்த நோக்கமும் கிடையாது. விசிகவின் வாக்குகள் தவெகவின் வெற்றிக்கு பயன் அடைந்துள்ளது. இதனை வாக்குச்சாவடிகள் வாரியாக எங்களால் உறுதிப்படுத்த முடியும். பாஜகவை எதிர்ப்பதற்கு இந்தியா கூட்டணியில் திமுக சேர்ந்து பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக கருதுகிறேன்.
பொதுத்தேர்தலோடு ஒப்பிடுகையில் அதிமுக வாக்கு வங்கி பெரிய அளவு சரிந்துள்ளது. பொதுத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற்றது. மீண்டும் அதிமுகவுக்கு வாக்களித்து என்ன பயன்? அவர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் கட்சி மாற வாய்ப்புள்ளது என மக்கள் நினைத்திருக்கக்கூடும். அதிமுகவின் வாக்கு வங்கி சரிவுக்கு உட்கட்சி பிரச்சினைகள் முக்கியமான காரணம். திமுகவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிமுகவின் சிதறிய வாக்குகளாகவும் இருக்கலாம்.
பாஜகவுக்கு கண்டனம்
டெல்லியில் போராட முயன்றவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். பாஜக அரசின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஞானேஷ் குமார் பதவி விலகுவதால் இதற்கு தீர்வு கிடைக்காது. தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தாமல், வாக்குச்சீட்டு பதிவை நடைமுறைப்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்டவர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று கூறினார்.




Click it and Unblock the Notifications
