தர்மேந்திர பிரதான் பாவம்.. மோடி பதவி விலக வேண்டும் என சொல்லுங்கள்.. திருமாவளவன் பேச்சு
சென்னை: தர்மேந்திர பிரதான் பாவம்.. தனி நபரை மட்டும் பதவி விலக சொல்வது என்பது முழுமையான நல்ல விளைவை ஏற்படுத்தாது.. மோடியை பதவி விலக சொல்லுங்கள் என விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் அம்பேத்கர் சிலையை திறந்து வைக்காதது குறித்து பேசிய அவர், "என்ன மாற்றம்.. அதிகாரிகளை மாற்றுவதால் அமைச்சர்களை மாற்றுவதால் விளைவுகள் மாறுமா? என்றால் மாறாது" என்றார்.
இது குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது:- இந்தியா முழுவதும் ஒரே தேர்வு.. இதற்காக தேசிய தேர்வு முகமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஏன் தமிழக அரசுக்கு நடத்த தெரியாதா? நீட் தேர்வின் மூலம் என்ன நடந்து இருக்கிறது என்றால் 12 ஆம் வகுப்பில் என்ன மதிப்பெண் எடுத்தாலும் அது பயனில்லை. 1,200க்கு 1,190 எடுத்தால் கூட மதிப்பில்லை. தனியாக கோச்சிங் கிளாஸ் செல்ல வேண்டும்.

நீட் தேர்வு கூடாது
நீட்டிற்காக பல மாதங்கள் கண்விழித்து படித்து தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். அது சிரமமாக இருக்கிறது என்ற காரணத்தால்தான், வினாத்தாளை முன்கூட்டியே கசியவிட்டு கோடிக்கணக்கில் வணிகம் செய்கிறார்கள். வினாத்தாள் கையில் கிடைக்க எத்தனை லட்சங்களையும் கொட்டிக்கொடுக்க மாணவர்கள் தயாராக இருக்கிறார்கள். அந்த குடும்பங்கள் தயாராக இருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் இது கொண்டு வரப்பட்டது. பாஜக ஆட்சி காலத்தில் கூட இல்லை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டதால் இதை நாங்கள் தூக்கி ஏறிகிறோம் என்று ஏன் பாஜக தூக்கி எறியக்கூடாது. காங்கிரஸ் நீட் வேண்டாம் என்று சொல்லாது. ஏனென்றால் அறிமுகம் செய்தது காங்கிரஸ் தான். பாஜகவும் வேண்டாம் என்று சொல்லாது. நீட் தேர்வே கூடாது என்று சொல்கிற அரசியல் இயக்கம் விசிக.
என்ன மாற்றம்?
நீட் கூடவே கூடாது என்பதுதான் நமது ஒற்றை முழக்கமாக இருக்க வேண்டும். தர்மேந்திர பிரதான் மாறிவிட்டால் இன்னொரு ஆள் வரப்போகிறார். அதேதான் நடக்க போகுது. இப்போ இருக்கிற அதிகாரியை தூக்கி போட்டுவிட்டு வேற ஆள் போட்டாலும் அதேதான் நடக்க போகிறது. போன ஆட்சியில் இருந்த போலீஸ் எல்லாம் மாற்றிவிட்டார்கள்.
இப்போது புது போலீஸ் வந்துட்டாங்க.. அம்பேத்கர் சிலை வைத்தால் அந்த போலீசும் எடுத்துட்டுதான் போறான்.. அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தால் போன போலீஸ் எப்படி ஷீட் அடித்து மூடியதோ அதே மாதிரி இப்போது உள்ள போலீசும் ஷீட் அடித்து மூடுகிறது. என்ன மாற்றம்.. அதிகாரிகளை மாற்றுவதால் அமைச்சர்களை மாற்றுவதால் விளைவுகள் மாறுமா? என்றால் மாறாது.
தர்மேந்திர பிரதான் பாவம்
நீட் தேர்வினால் ஏற்படுகிற பாதிப்பு மாற வேண்டும் என்றால் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தர்மேந்திர பிரதான் பாவம்.. தனி நபரை மட்டும் பதவி விலக சொல்வது என்பது முழுமையான நல்ல விளைவை ஏற்படுத்தாது. அடிப்படையில் மொத்தத்தில் இந்த அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.. மோடி பதவி விலக வேண்டும் என்று சொல்லுங்கள்.
கடந்த சில ஆண்டுகளில் பல போட்டித்தேர்வுகளில் 152 முறை வினாத்தாள் கசிந்துள்ளது. அவ்வளவு ஓட்டை உடைசல் உள்ளது. நீ யாரை மாற்றினாலும் கடைசி வரை பியூன் வரை மாற்றினால்தான் முடியும். ஒரு ஆள் இரண்டு ஆள் மாற்றுவதால் பிரச்சினை தீராது. அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
