திருமாவளவனுக்கு அண்மையில் போன் செய்த தூரிகை - செப். 16 ஐஐடியில் விருது விழா! இப்படி ஆயிருச்சே
சென்னை: பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை, செப்டம்பர் 16 ஆம் தேதி நடைபெற இருந்த விருது வழங்கும் விழாவுக்கு தன்னை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்த நிலையில் அவரது மறைவு பெருந்துயரம் அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.
பிரபல கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான கபிலன், நூற்றுக்கணக்கான வெற்றிப் பாடல்களை எழுதியுள்ளார். எளிமையான தனது வரிகளின் மூலமாக அவரது பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தன.
இவர் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் திரைப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தார். இவருக்கு தூரிகை என்ற மகள் இருந்தார். கல்லூரி படிப்பை நிறைவு செய்துவிட்டு ஆடை வடிமைப்பாளராக பணிபுரிந்து வந்தார்.

ஆடை வடிவமைப்பு
ஏராளமான திரைப்படங்கள் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு விதவிதமான ஆடைகளை வடிவமைத்துக் கொடுத்தார். பெண்ணியவாதியான இவர் பெண்களின் பல்வேறு உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். தந்தை போலவே எழுத்தாற்றல் கொண்ட தூரிகை Being Women என்ற இதழையும் நடத்தி வந்திருக்கிறார்.

தூரிகையின் இதழ்
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பீயிங் உமன் என்ற ஆங்கில இதழை தொடங்கிய தூரிகை, சாதிக்க விரும்பும் பெண்களிடம் பேட்டிகளை எடுத்து வெளியிட்டு வந்தார். அதேபோல் பெண்களின் உரிமைகள், பிரச்சனைகள் தொடர்பாகவும் கட்டுரைகளை அந்த இதழில் தூரிகை வெயிட்டு வந்தார்.

விருது விழா
இந்த இதழ் தொடங்கி 2 ஆண்டுகள் நிறைவடைவதை அடுத்து செப்டம்பர் 16 ஆம் தேதி சென்னை ஐஐடியில் விருது நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்ட தூரிகை அதற்கான பணிகளில் ஈட்டுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். பெண்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையிலும் அவர்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்த இவரது தற்கொலை அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

திருமாவளவன் இரங்கல்
இது தொடர்பாக ட்விட்டரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "மக்கள்கவி கபிலன் அவர்களின் அன்புமகள் தூரிகையின் மறைவு பெருந்துயரமளிக்கிறது. செப்-16 அன்று அவரது BEING WOMEN இதழின் சார்பில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்கும்படி அலைபேசிவழி எனக்கு அழைப்பு விடுத்தார். தன் தந்தையைப்போல பெரும்புகழுடன் பெருமகிழ்வுடன் வாழவேண்டிய இளநங்கைக்கு வீரவணக்கம்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications