மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பு.. மோடி பதவி விலகனும் என்றும் வாசகம்
மதுரை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும் எனவும் வாசகமும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 20 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் மாணவர்கள், இளைஞர்கள் காயம் அடைந்தனர்.

இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் குதித்துள்ளது. பிரதமர் மோடி இல்லம் முன்பாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். நாடு முழுவதும் நீட் தேர்வு குளறுபடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில், மதுரை அருகே சோழவந்தான் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கபட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும் ரயில் நிலையத்தில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. சோழவந்தான் ரயில் நிலையம் வழியாக செல்லக்கூடிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களான பொதிகை மற்றும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என வலியுறுத்தியும் வாசகங்கள் சுவர்களில் எழுதப்பட்டு இருந்தன. அடையாளம் தெரியாத நபர்கள் எழுதிவிட்டு சென்ற நிலையில், அதனை ரயில்வே நிர்வாகம் அழித்துள்ளது.


Click it and Unblock the Notifications
