கண் பார்வையே போய்விடும் ஆபத்துள்ள பெல்லட் குண்டுகள், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது பிரயோகம்
டெல்லி: போராட்டக்காரர்களின் கண் பார்வையை பறிக்கும் பெல்லட் குண்டுகளை பாதுகாப்பு படையினர் டெல்லி போராட்டத்தில் இளைஞர்களுக்கு எதிராக முதன் முறையாக பயன்படுத்தியிருக்கின்றனர். கடைசியாக கடந்த 2024ம் ஆண்டு ஹரியானாவில் விவசாயிகளின் போராட்டத்தில் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.
பத்திரிகையாளர் அஷ்னா பூட்டானி இது குறித்து ஆதாரங்களுடன் x தளத்தில் பதிவிட்டிருக்கிறார். போராட்டத்தில் காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களின் தாக்குதலில் மொத்தம் 80க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.

இவர்களில், குருகிராமை சேர்ந்த ஷேக் இர்ஷாத் மன்சூரி (25) எனும் இளைஞருக்கு டெல்லி லேடி ஹார்டிங்கே மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது. அவரது கண்ணின் அடிப்பகுதி மற்றும் கழுத்து பகுதியிலிருந்து பெல்லட் குண்டுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. இது குறித்து டெல்லி போலீஸ் மறுத்துள்ளது. "அமைதியாக போராடியவர்கள் மீது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. உறுதி செய்யப்படாத தகவல்களை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்ய வேண்டாம்" என்று கூறியிருக்கிறது. ஆனால், சிஆர்பிஎஃப் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பெல்லட் குண்டுகள்
சிறிய உருண்டையாக ஈயத்தால் செய்யப்பட்ட குண்டுகளைதான் பெல்லட் குண்டுகள் என்று சொல்லப்படுகிறது. இவரை கொண்டு தாக்கும்போது எதிரில் இருப்பவர்கள் கண் பார்வையை இழக்க நேரிடும். டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் இந்த குண்டுகள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையாகும். இது தவிர ஷாக் பாட்டன் எனப்படும் மின் அதிர்ச்சி தடியடியும் மாணவர்கள், இளைஞர்கள் மீது நடத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பு படையினரின் இந்த தாக்குதல் கடும் எதிர்ப்புகளை உருவாக்கியிருக்கின்றன.
மாணவர்களின் போராட்டம்
நீட், சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை. கரப்பான் ஜனதா (CJP) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் இவர் நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் இவர்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் காயமடைந்திருந்தனர். அதேபோல நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியின் வீட்டிற்கு எதிரே மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
