கொரோனா நிவாரண நிதி.. முதல் தவணை ரூ 2000ஐ மே மாதம் பெற முடியாதவர்கள்.. ஜூனில் பெறலாம்.. தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் 98.4% குடும்பங்கள் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூ 2000ஐ பெற்றுள்ளதாகவும் முதல் தவணையை மே மாதம் வாங்காதவர் ஜூனில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வரும் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, திமுக அரசு பொறுப்பேற்றதும் ரேசன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 4000 வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டது. அதில் முதல் தவணை மே மாதம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்
இந்நிலையில், முதல் தவணையை மே மாதம் வாங்காதவர் ஜூனில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஜூன் 7ஆம் தேதி வரை அதிக தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

கொரோனா நிவாரண நிதி
இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களும் பாதிப்புக்குள்ளாகும் சூழலைத் தமிழக அரசு கருத்தில் கொண்டுள்ளது. இதனால் 2,09,81.900 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண உதவித் தொகையின் முதல் தவணையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.2000/- வீதம் கடந்த மே 15 முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

98.4 சதவீத குடும்பங்கள்
31.05.2021 முடிய இவற்றில் 98.4 சதவீதம் குடும்பங்கள் நிவாரண உதவித் தொகை பெற்றுச் சென்றுள்ளனர். மீதமுள்ள குடும்பங்களில் நோய்த் தொற்று காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும், முழு ஊரடங்கு காரணமாகச் சொந்த ஊருக்குச் சென்ற காரணத்தினாலும் நிவாரண உதவித் தொகை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதம்
இது அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே குடும்பங்கள் அவர்களுக்கான நிவாரண உதவிப் பெறும் வகையில் அந்தொகையிளை ஜூன் மாதத்தில் சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்" எனத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications