வடக்கில் இருந்து ஆபத்து.. NDA கூட்டணிக்கு No Entry போடும் தேர்தல்.. திருவள்ளூரில் பேசிய ஸ்டாலின்
சென்னை: "தமிழ்நாட்டின் வடக்கு வாசலான திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். வடக்கில் இருந்து வரும் NDA என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது." என திருவள்ளூரில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நாள் நெருங்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று திருவள்ளூரில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிப் பேசினார்.

திருவள்ளூரில் திமுக, காங்கிரஸ், தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமி இருக்கும் தைரியத்தில்தான் பாஜக ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். இந்த தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கு, NDAக்கு No Entry ஆக இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் வடக்கு வாசலான திருவள்ளூருக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டுக்கு ஆபத்து எப்போதும் வடக்கில் இருந்துதான் வரும். வடக்கில் இருந்து வரும் NDA என்ற ஆபத்தை தடுத்து நிறுத்தும் தேர்தல் இது. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல் தான். தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் தயாரா?
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு அதிமுக கோமாளித்தனமான ஆட்சி நடத்தினர். மக்களைத் தெருவில் போராட வைத்தனர். ஆப்பத்தை குரங்கு பங்கிட்டது போல் அதிமுகவை பாஜக பங்கிட்டது. தனக்கு பதவி கொடுத்தால் போதும், சம்பந்திக்கு ரெய்டு நடக்காமல் இருந்தால் போதும் என இபிஎஸ் விட்டுக் கொடுத்தது தான் தமிழகத்தின் உரிமைகள். எடப்பாடி பழனிசாமி இருக்கும் தைரியத்தினால் தான் என்.டி.ஏ கூட்டணி ஆட்சிக்கு வருவோம். மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என இஷ்டத்துக்கு பேசுகின்றனர்.
அவர்களின் கொட்டத்தை அடக்க வேண்டும். அடிமைகளை விரட்ட வேண்டும். டெல்லி ரிமோட் கன்ட்ரோலுக்கு தமிழகத்தில் சிக்னல் கிடைக்காது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் என்ன வளர்ச்சி பெற்றது? 0.7 சதவீதம்தான் வளர்ச்சி பெற்றது. வளர்ச்சியே நின்றுவிட்டது. இன்று தற்போது பத்து தோல்வி பழனிசாமியாக இருக்கிறார். அந்த பெயரை 11 தோல்வி பழனிசாமியாக அப்கிரேட் செய்துவிடலாம். தமிழகம் முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளோம்.
தமிழ்நாட்டில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை பார்த்து எடப்பாடி பழனிசாமிக்கு எரிச்சல் ஏற்பட்டுள்ளது. அவதூறு வார்த்தைகளை பரப்பி வருகின்றனர். எவ்வளவு முறை நாம் கேட்டாலும் அரசு செய்த சாதனைகளை இபிஎஸ் சொல்லவில்லை. ஆனால், இந்த ஸ்டாலின் கம்பீரமாக புள்ளிவிவரத்தோடு சாதனைகளை சொல்கிறேன். அனைத்தையும் தரவுகளோடு சொல்ல முடியும்.
தமிழ்நாடு, தமிழ்நாடாக இருப்பது சிலருக்கு கண்ணை உறுத்துகிறது. தமிழக அரசுக்கு ஏட்டிக்குப் போட்டியாக ஆட்சி நடத்த மத்திய அரசின் ஏஜென்ட்டாக ஆளுநர் ரவி வந்தார். தமிழ்நாட்டை தமிழகம் என்று ஆர்.என். ரவி சொல்லவேண்டும் என்றார். இது அவரின் குரல் மட்டுமல்ல. இது பாஜக, ஆர்எஸ்எஸ் குரல். தமிழ்நாட்டை பெயரை மட்டுமல்ல. இரண்டாக உடைப்போம். அந்த அதிகாரம் இருக்கிறது என திமிராக பேசினர். ஆனால், சவால் விட்டு சொல்கிறேன், திமுக, ஸ்டாலின் இருக்கும் வரை உங்களால் தமிழகத்தை தொட்டுப் பார்க்க முடியாது.
தைரியம் இருந்தால் தமிழ்நாட்டுக்கு தட்சிண பிரதேசம் என பெயர் வைப்போம் என சொல்லுங்கள் பார்ப்போம். எடப்பாடி பழனிசாமியைப் போன்று அனைவரும் அமைதியாக இருக்க மாட்டோம். நாங்கள் சுயமரியாதைக்காரர்கள். இப்போது, மும்மொழிக் கொள்கை என மத்திய அமைச்சர்கள் சொல்கின்றனர். இதனை எதிர்த்து பேச இபிஎஸ்க்கு தைரியம் உள்ளதா? என்ன திட்டம் போட்டாலும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இருந்து மாற்ற முடியாது." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications