3 விஷயங்கள்தான் என்னை வழிநடத்துகின்றன.. கேடி ராகவன் சர்ச்சையை அடுத்து.. பாஜக அண்ணாமலை திடீர் ட்வீட்
சென்னை: 3 விஷயங்கள்தான் என்னை வழிநடத்துகின்றன என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். கே. டி ராகவன் வீடியோ தொடர்பான சர்ச்சைகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அண்ணாமலை ட்வீட் செய்து உள்ளார்.
தமிழ்நாடு பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே. டி ராகவனுக்கு எதிராக நேற்று முதல்நாள் பாலியல் ரீதியான குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. பெண் ஒருவரிடம் வீடியோ காலில் கே.டி ராகவன் பாலியல் ரீதியாக பேசுவதை போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாஜகவின் உறுப்பினராக இருந்த மதன் ரவிசந்திரன் தனது பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கத்தில் இதை வீடியோவாக வெளியிட்டு இருந்தார். அதோடு தன்னிடம் இன்னும் கே.டி ராகவனின் வீடியோக்கள் பல இருப்பதாகவும், வரும் நாட்களில் அதை வெளியிடுவேன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதன் குறிப்பிட்டு இருந்தார்.

மதன் பேச்சு
இந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோவின் தொடக்கத்தில் மதன் பேசும்போது, இந்த வீடியோவை வெளியிடலாமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்டேன். அவர் வெளியிட அனுமதி அளித்தார். அதன்பின்பே வீடியோவை வெளியிட்டேன் என்று மதன் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத வாட்ஸ் ஆப் சாட் ஒன்றையும் மதன் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் வீடியோ வெளியான சில நிமிடங்களில் கே. டி ராகவன் தனது பாஜக மாநில பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

நீக்கம்
இதையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், மதன் ரவிசந்திரன் தன்னை சந்தித்ததாகவும், தன்னிடம் வீடியோ பற்றி பேசினார். இதை வெளியிடட்டுமா என்று கேட்டார். ஆனால் என்னிடம் அவர் அந்த வீடியோவை காட்டவில்லை என்று அண்ணாமலை கூறினார். அதோடு, வீடியோவை பார்க்காமல், அதன் உண்மைத்தண்மையை அறியாமல் கேடி ராகவன் மீது எப்படி நடவடிக்கையை எடுப்பது என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

மதன் வீடியோ
நேற்று பாஜக கட்சியில் இருந்து மதன் நீக்கப்பட்டார். அதோடு அவரின் யூ டியூப் பக்கமும் முடக்கப்பட்டது. இதையடுத்து அண்ணாமலைக்கு எதிராக இன்று வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன், அண்ணாமலையுடன் பேசும் ஆடியோவை அதில் இணைத்து இருந்தார். அதில் அண்ணாமலையிடம் கேடி ராகவனின் வீடியோவை மதன் காட்டியது போலவும், இது தொடர்பாக மதனும் அண்ணாமலையும் விவாதித்தது போலவும் உரையாடல்கள் அமைந்துள்ளன. அதோடு வீடியோவை வெளியிட அண்ணாமலை ஒப்புக்கொண்டதாகவும், ஆனால் இப்போது அதற்கு எதிராக பேசுகிறார் என்றும் மதன் குறிப்பிட்டுள்ளார்.

40 நிமிட வீடியோ
இந்த ஆடியோ வைரலாகி வரும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில், என்னை எப்போது மூன்று விஷயங்கள்தான் இதுவரை வழி நடத்துகின்றன. இனியும் அந்த மூன்று விஷயங்கள்தான் என்னை வழி நடத்தும். 1. பாஜகவை தமிழ்நாட்டில் ஆட்சிக்கு கொண்டு வருவதில் ஒரு சிறு காரணியாக இருக்க வேண்டும். 2. பல மக்களின் தியாகத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த கட்சியின் சாதாரண தொண்டனாக இருக்க வேண்டும். 3. தேசம்தான் எப்போதும், எல்லா நேரமும் எனக்கு முக்கியம்.. இந்த மூன்று விஷயங்கள் மட்டுமே என்னை வழி நடத்துகின்றது என்று அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

கருத்து
இன்று காலை வெளியான ஆடியோ பற்றி தமிழ்நாடு பாஜக இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அண்ணாமலையும் இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில்தான் அவரின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்த 40 நிமிட ஆடியோவில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. ஆனால் இதில் இருப்பது அண்ணாமலைதானா, அவரின் உண்மையான குரலா இது என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications