கமல்ஹாசன் சொன்ன ஒரு வார்த்தையால் 8 கோடியை தியாகம் செய்யும் "Thug Life!"
சென்னை: கமல்ஹாசன் நடித்து, மணிரத்னம், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரோடு சேர்ந்து 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்த, 'தக் லைஃப்' (Thug life) திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டால், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி இழப்பு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது எப்படி ஏற்படும், தவிர்க்க முடியுமா என்பதை பார்க்கலாம் வாங்க.
விநியோக உரிமை விவரங்கள்
கர்நாடகாவின் தக் லைப், விநியோக உரிமையை வெங்கடேஷ் கமலாகர் என்பவர் ₹8 கோடி ரூபாய் முன்பணம் கொடுத்து வாங்கியுள்ளார். இந்த திரைப்படம் கன்னட உள்பட பல மொழிகளில் வெளியிடப்படுவதால், பாக்ஸ் ஆபீஸில் பெரும் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் இந்த முதலீடு செய்யப்பட்டது. ஒருவேளை படம் நல்ல வெற்றி பெற்றால் 50 கோடி வரை வசூலித்திருக்கும்.

தடைக்கான காரணம்
கமல்ஹாசன் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என்று கூறியதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் (KFCC) கமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. இல்லையெனில் மாநிலத்தில் திரைப்படத்தை தடை செய்வதாக அறிவித்துள்ளது. கன்னட மீடியாக்களிலும் வேறு செய்தி இல்லாததால் இதையே ஊதி பெரிதாக்கியபடி உள்ளனர். டிவி ஆங்கர்கள் எல்லாம் உச்ச ஸ்தாபியில் கமலுக்கு எதிராக கத்திக்கொண்டே இருப்பதால் பார்ப்பவர்கள் காதுகளில் ரத்தம் வரும் நிலை உள்ளது.
அரசியல் தலையீடு
இது போதாது என, கர்நாடகாவின் கன்னட மற்றும் கலாச்சார அமைச்சர் சிவராஜ் எஸ். தங்கடகி, கமல் மன்னிப்பு கேட்காத வரை திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று திரைப்பட சங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பாஜகவும் தன் பங்குங்கு குதிக்கிறது. ஹிந்தி திணிப்பு விஷயத்தை மடைமாற்றம் செய்ய பாஜகவுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட வருமானம்
மணிரத்னத்தின் முந்தைய படமான 'பொன்னியின் செல்வன் 2' கர்நாடகாவில் ரூ.22+ கோடி நிகர வசூல் செய்திருந்தது. விக்ரம், கார்த்தி நடித்த பொன்னியின் செல்வனை ஒப்பிட்டால், கமல்ஹாசனின் பிரபலம் கர்நாடகாவில் அதிகம். அதை கருத்தில் கொண்டு, 'தக் லைஃப்' படமும் அந்த மாநிலத்தில் நல்ல வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலே குறிப்பிட்டதை போல 50 கோடி வரை கூட வசூலாகும் வாய்ப்பு இருந்தது. இந்த வருமானத்தை வினியோகஸ்தர் இழக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தமிழ் சினிமாவின் பான்-இந்தியா அணுகுமுறையை பாதிக்க கூடும். இருப்பினும் சத்யராஜ் பாகுபலி காலகட்டத்தில் மன்னிப்பு கேட்டதை போல இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க கமல்ஹாசன் ரெடியில்லை. இன்றைய பேட்டியிலும் அதை உறுதி செய்துவிட்டார்.
தற்போதைய நிலைமை
ஜூன் 5ம் தேதி வெளியாக திட்டமிடப்பட்ட இந்த திரைப்படத்தின் எதிர்காலம் நிச்சயமற்ற நிலையில் உள்ளது. விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலாகர், கமலை மன்னிப்பு கேட்க சம்மதிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால் அது நடக்காது என்று தெரிகிறது.
"மொழி, நிலம், நீர் என்று வரும்போது, கமல்ஹாசன் எவ்வளவு பெரிய ஆள் என்றாலும், அதற்கு எதிராக பேசுவதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று அமைச்சர் வேறு அவ்வப்போது வீர வசனங்களை தெளித்து வருகிறார். இந்த சர்ச்சையால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ரூ.8 கோடி ரூபாய் முழு இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. கமல் உள்ளிட்ட கலைஞர்கள் பல லட்சம் செலவு செய்து பெங்களூரில் ப்ரமோஷன் நிகழ்ச்சி செய்திருந்தனர். அந்த பணமும் ஆற்றோடு அடித்து செல்வதை போலத்தான் போகப்போகிறது போலும்.












Click it and Unblock the Notifications