2.30 மணி நேரம் வேளாண் பட்ஜெட் வாசிச்சாங்க.. ஒரு புதிய திட்டம் கூட இல்லையே! விளாசிய எடப்பாடி பழனிசாமி
சென்னை: சுமார் இரண்டரை மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் எந்தவொரு புதிய திட்டமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்ன ஆனது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தவெக ஆட்சி அமைந்த பின் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் துறை அமைச்சர் வினோத் சுமார் 129 நிமிடங்கள் வேளாண் பட்ஜெட் உரையை வாசித்தார். காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கிய அமைச்சர் வினோத், சரியாக 11.39 மணிக்கு பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார்.

இதன்பின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தவெக ஆட்சி அமைந்த பின் முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள். இந்த வேளாண் பட்ஜெட்டால் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. திமுக ஆட்சியில் 20 துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் பட்ஜெட் என்று அறிவித்தார்கள்.
அதனை அப்படியே தவெக அரசும் பின்பற்றி விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது. சுமார் 2.30 மணி நேரம் வாசிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் திட்டங்களோ, புதிய திட்டங்களோ எதுவும் இல்லை. ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் வேளாண் மானியக் கோரிக்கையின் போது என்ன அறிவிப்பு இருக்குனோ, அதே அறிவிப்புகள் தான் உள்ளது.
தேர்தல் நேரத்தில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,500, கரும்புக்கு ஆதார விலையாக ரூ.4,500 வழங்குவோம் என்றார்கள். அந்த அறிவிப்பு வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. விதைப்பு கால செலவுகளை சமாளிக்க இரு முறை ரூ.15,000, உழவர் தோழர் திட்டத்தின் மூலமாக உழவர் உரிமை அட்டை கொடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கப்படும் என்றார்கள்.
தேர்தல் வாக்குறுதியாக இனிக்க இனிக்க அறிவிப்பை கொடுத்த தவெக, பட்ஜெட்டில் எதையும் அறிவிக்கவில்லை. பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு என்ன ஆனது? விவசாயிகளுக்கு நன்மை கொடுக்கக் கூடிய பட்ஜெட் இது அல்ல.. அதிமுக ஆட்சியில் குடிமராமத்து திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அந்த திட்டம் குறித்து முழுமையான அறிவிப்புகள் இல்லை. பல துறையை இதில் இணைத்துவிட்டார்கள்.
அதனை இதில் இணைத்துவிட்டால், எதற்கு 20 அமைச்சர்கள் இருக்கிறார்கள். திமுக ஆட்சியை போலவே தவெக ஆட்சியிலும் ஏமாற்றம் தான்.. பொது பட்ஜெட்டே 2.31 மணி நேரம் தான்.. வேளாண் பட்ஜெட் 129 நிமிடங்கள் வாசித்துள்ளனர். எந்த பிரயோஜனமும் இல்லை.. தவெக வாக்குறுதியையாவது அறிவிக்க வேண்டும் அல்லவா.. பொது பட்ஜெட்டிலும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை..
காவிரியில் தண்ணீர் பெற விஜய் வாய் திறந்து கூட பேசவில்லை.. கர்நாடகா வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் பேசியது விஜய்க்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிற்கும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. வேளாண் பட்ஜெட்டுக்கு மைனல் பூஜ்ஜியம் மார்க் தான் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
