உருப்படியாக ஒரு திட்டமும் இல்லை.. முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்ன ஆனது? கேள்வி கேட்கும் உதயநிதி!
சென்னை: தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டில் உருப்படியாக எந்த திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மீண்டும் தவெக பெயர் மாற்றம் செய்துள்ளதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், காவிரி விவகாரம் தொடர்பாக விஜய் வாய் திறக்காமல் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
தவெக ஆட்சி அமைக்கப்பட்ட பின் முதல்முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தமக 129 நிமிடங்கள் இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் வாசித்துள்ளார். தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறாதது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் உரைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், வேளாண் பட்ஜெட் என்று சொல்வதை விட முதல்வருக்கு மரபுக்கு மீறி புகழுரை வாசித்துள்ளார்கள். வேளாண் பட்ஜெட்டில் புதிதாக ஒன்றுமில்லை. காவிரியில் தான் தண்ணீர் வரவில்லை என்றால், வேளாண் பட்ஜெட்டில் எந்த திட்டத்தையும் கூட அறிவிக்கவில்லை.
விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களாக எத்தனையோ பிரச்சனை உள்ளது. ஏற்கனவே பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்வேன் என்று கூறிவிட்டு தவெக ஏமாற்றிவிட்டது. தற்போது மேகதாது பிரச்சனை நிலவி வருகிறது. ஒரு பக்கம் குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழல் உள்ளது. விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அவர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் வகையில் தான் திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றி வெற்றி என்ற பெயரை சேர்த்து புதிய திட்டத்தை போல் அறிவித்துள்ளார்கள். உருப்படியாக எந்த அறிவிப்பும் இல்லை. பயிர்க்கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை சொல்லிக் கொண்டே இருந்தார் விஜய்.
ஆனால் அதைக்கூட முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. அதுதொடர்பாக எந்த பதிலும் அளிக்கவில்லை. காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீரை கர்நாடகா கொடுக்க முடியாது என்று அறிவித்துவிட்டனர். கர்நாடகா செல்கிறேன் என்று புறப்பட்ட விஜய்யை வர வேண்டாம் என்று அம்மாநில முதல்வர் கூறிவிட்டார். அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறோம்.
அதற்கும் விஜய் பதில் அளிக்கவில்லை. நாளை கேள்வி நேரம் முடிவடைந்த பின், காவிரி விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என்று ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். வாய்ப்பளிப்பார் என்று நம்புகிறோம். அதற்கு முதல்வர் விஜய் பதில் சொல்வார் என்று திமுக காத்திருக்கிறது. திமுக என்றும் விவசாயிகளுக்கு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
