“ஆண்களுக்கு பாதுகாப்பு இல்லை..” காங்கிரஸ் MLA கோரிக்கைக்கு சபாநாயகர் அப்பாவு அடித்த டைமிங் கமெண்ட்!
சென்னை: சட்டசபையில், காங்கிரஸ் எம்.எல்.ஏவிடம் சபாநாயகர் அப்பாவு டைமிங்கில் அடித்த கமெண்ட்டால் சட்டசபையே சிரிப்பலையில் ஆழ்ந்தது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் தங்கள் துறை சார்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

சட்டத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், "வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லை. வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது அதிகரித்துவிட்டது. வழக்கறிஞர்களுக்குப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும். காலியாக உள்ள மாவட்ட நீதிபதிகள் பணியிடங்கள் விரைவில் நிரப்ப வேண்டும். உச்சநீதிமன்ற கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும்" என கோரிக்கைகளை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய துரை சந்திரசேகர், "குடும்ப வன்முறை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். பெண்களை போலவே ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும். 100 வழக்குகள் வந்தால் அவற்றில் 75 பேர் ஆண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்" என்று தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, "வழக்கறிஞர்கள் புகார் அளித்தால் முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற கிளையை தமிழகத்திற்கு கொண்டுவர முதலமைச்சர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அரசு சார்பில் தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது." என்றார்.
மேலும் துரை சந்திரசேகரின் மற்றொரு கோரிக்கைக்கு பதில் அளித்த அமைச்சர் ரகுபதி, "குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் அதிக அளவில் பெண்கள் தான் புகார் அளிக்கிறார்கள். ஆண்கள் ஒருவர் கூட பாதிக்கப்பட்டதாக புகார் அளிக்கவில்லை" எனத் தெரிவித்தார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, "சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் பாதிக்கப்பட்டிருந்தால் புகார் அளிக்கலாம்" என சிரித்தபடி கமெண்ட் அடிக்க, ஒட்டுமொத்த அவையும் சிரிப்பலையில் ஆழ்ந்தது.












Click it and Unblock the Notifications