சென்னையில் ஆக. 2-ல் கருணாநிதி படம் திறப்பு- ஆக. 3- 6 வரை ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முகாம்
சென்னை: தமிழக சட்டசபை நூற்றாண்டு விழா, சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி படத் திறப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை ஊட்டியில் தங்குகிறார்.
கொரோனா நெருக்கடியால் தமிழக சட்டசபைக் கூட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தினார் அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி. கொரோனா கால கட்டுப்பாடுகளுடன் கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டங்கள் நடைபெற்றன.
சட்டசபை தேர்தலில் திமுக வென்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலினும் சென்னை கலைவாணர் அரங்கத்திலேயே சட்டசபையை கூட்டினார்.

பதவி ஏற்பு விழா
முதலில் எம்.எல்.ஏ.க்களின் பதவியேற்பு மற்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் துவங்கிய சட்டசபை நிகழ்வுகள் இரண்டுமே சென்னை கலைவாணர் அரங்கத்தில் தான் நடைபெற்றன. அதேநேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டிய புதிய சட்டசபை கட்டிடம் குறித்த விவாதங்களும் ஒருபக்கம் நடைபேற்று வருகின்றன. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் இப்போது மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கருணாநிதி முதல்வராக இருந்த போது பார்த்து பார்த்து கட்டிய இந்த சட்டசபை வளாகத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா பயன்படுத்தாமல் மருத்துவமனையாக்கினார். கருணாநிதி உருவாக்கிய இந்த புதிய சட்டசபை வளாகத்தை திமுக அரசு பயன்படுத்தக் கூடும் எனவும் கூறப்பட்டது.

கருணாநிதி படத் திறப்பு
ஆனால் தமிழக அரசின் பட்ஜெட் கூட்டத்தையும் சென்னை கலைவாணர் அரங்கத்திலேயே நடத்த திமுக அரசு தீர்மானித்துள்ளது. இந்த நிலையில்தான், சென்னை கோட்டையில் உள்ள சட்டசபையில் கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழாவை நடத்த திட்டமிட்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், சட்டசபை நூற்றாண்டு விழாவை கையில் எடுத்தார்.

முதலாவது சட்டசபை
1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சி புறக்கணித்த நிலையில் நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களில் வென்றது. நீதிக்கட்சியின் சுப்பராயலு ரெட்டி முதல்வரானார். 1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி சென்னை மாகாண சட்டசபை செயல்பட தொடங்கியது. இந்த சட்டசபைதான் தற்போது நூற்றாண்டை நிறைவு செய்திருக்கிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
சட்டசபை நூற்றாண்டு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் கோட்டையில் உள்ள சட்டசபையில் நடைபெற்று வருகின்றன. சட்டசபை நூற்றாண்டு விழா வளைவும் அமைக்கப்பட உள்ளது. ஆகஸ்ட் 2-ந்தேதி கலைஞர் கருணாநிதி படத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். ஏற்கனவே டெல்லி சென்ற போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார் மு.க.ஸ்டாலின். இன்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் விழா அழைப்பிதழை நேரில் சென்று கொடுத்தார்.

1977-ல் நீலம் சஞ்சீவ ரெட்டி
தமிழக சட்டசபையில் தலைவர்களின் உருவப்படத்தை திறந்து வைக்க வருகை தரும் 2-வது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். முன்னதாக 1977-ம் ஆண்டு சட்டசபையில் பெருந்தலைவர் காமராஜர் உருவப்படம் திறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதியாக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜரின் உருவப்படத்தை திறந்துவைத்தார்.

மும்முர ஏற்பாடுகள்
சென்னை கோட்டையில் உள்ள சட்டசபையில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் எல்லாம் சரியாக நடக்கிறதா என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கவனித்து சில மாற்றங்களை செய்திருக்கிறார். ஒவ்வொரு ஏற்பாடுகளையும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார் அமைச்சர் எ.வ. வேலு. முதல்வர் ஸ்டாலின் தரும் ஆலோசனைகளுக்கு ஏற்ப விழா நிகழ்ச்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன.

வரவேற்புக்கு தயார்
இதனிடையே தமிழகத்துக்கு 5 நாட்கள் பயணமாக வரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்க தயாராகி வருகிறது திமுக அரசு. இன்னொரு பக்கம் 4 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருக்கும் பாஜகவின் பிரமுகர்களும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வரவேற்பு கொடுக்க மும்முரமாக இருக்கின்றனராம்.

ஜனாதிபதி மெனு
மேலும், ஜனாதிபதியின் விருப்பமான சாப்பாடு மெனுவை, டெல்லியிலுள்ள ராஷ்டிரபதி பவன் அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுள்ளதாம் திமுக அரசு. அவருக்கான சாப்பாடு மெனுவை சிறப்பாக செய்து தருவதற்கான டீமும் ரெடியாக உள்ளதாம். சட்டசபை நூற்றாண்டு விழா ஆகஸ்ட் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தேசிய கீதமும், தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்படும். மாலை 5.05 மணிக்கு சபாநாயகர் அப்பாவு வரவேற்புரை ஆற்றுகிறார். மாலை 5.10 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், சட்டசபை அரங்கத்தில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார். மாலை 5.20 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார்.

கண்டிப்பாக முக கவசம்
மாலை 5.30 மணிக்கு விழாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமை உரை ஆற்றுகிறார். மாலை 5.40 மணிக்கு தலைமை விருந்தினரும், ஜனாதிபதியுமான ராம்நாத் கோவிந்த் விழாப் பேருரை ஆற்றுகிறார். மாலை 5.50 மணிக்கு துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நன்றியுரை ஆற்றுகிறார். நிறைவாக தேசிய கீதம் இசைக்க விழா நிறைவடைகிறது, இந்த விழாவுக்கு வருபவர்கள் கண்டிப்பாக என்-95 வகை முக கவசத்தை மட்டுமே அணிந்துவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் சென்னை வருகையையொட்டி, போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட இருக்கிறது.

ஊட்டி செல்லும் ராம்நாத் கோவிந்த்
சட்டசபை நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு விட்டு ஊட்டிக்கு செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். ஊட்டியில் ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் ஆகஸ்ட் 6-ந் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாட்களும் அங்கேயே தங்குகிறார். ஆகஸ்ட் 5-ந் தேதி ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை அவர் பார்வையிடுகிறார். இதற்காக, ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் ஊட்டி ராஜ்பவன் பணியாளர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள அனைத்து பணியாளர்களும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுள்ளனரா என்றும் ஆய்வு செய்திருக்கின்றனர் சென்னை ராஜ்பவன் அதிகாரிகள். ஊட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தங்கும்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் ஊட்டியில் முகாமிட உள்ளதாகாவும் கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் ஊட்டி பயணம் உறுதி செய்யப்படவில்லை.












Click it and Unblock the Notifications