எடப்பாடி கையில் உள்ள சூப்பர் பவர்.. அடுத்த 15 நாட்கள் தமிழக அரசியலையே தீர்மானிக்கும்! 25 பேரின் கதி?
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், கட்சித் தலைமையின் முடிவுக்கு எதிராக வாக்களித்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை கோருவதா அல்லது அவர்களை மன்னிப்பதா என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) எடுக்கப்போகும் முடிவு தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 நாள் அவகாசம் மற்றும் 10-வது அட்டவணை
நேற்று தமிழ்நாடு சட்டசபையில் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீதான நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்தனர். இதில் சிவி சண்முகம், வேலுமணி உட்பட 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி பழனிசாமி சார்பில் அதிமுக எம்எல்ஏக்கள் எல்லோரும் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டும் கூட சிவி சண்முகம், வேலுமணி உட்பட 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 10-வது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கட்சித் தலைமைக்கு உண்டு. இருப்பினும், அதே சட்டம் ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு முக்கிய வாய்ப்பையும் வழங்குகிறது. அதாவது, கட்சித் தலைமையின் உத்தரவை மீறி வாக்களித்த உறுப்பினர்களை, அந்த வாக்கெடுப்பு நடந்த 15 நாட்களுக்குள் மன்னித்து ஏற்றுக்கொள்ள (Condone) கட்சிக்கு அதிகாரம் உள்ளது.
இந்த விதியைப் பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி அதிருப்தியாளர்களை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வாரா அல்லது அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் பரிந்துரைப்பாரா என்பதுதான் இப்போதைய கேள்வி.
2017 நிகழ்வும் தற்போதைய சூழலும்
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால், அப்போது அவர் அந்த 11 பேர் மீதும் எந்தவித தகுதி நீக்க நடவடிக்கையும் கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்றதொரு அணுகுமுறையை இப்போதும் அவர் கையாள்வாரா என்பதை அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.
கொறடா உத்தரவு: சட்டச் சிக்கல்கள்
இந்த விவகாரத்தில் மற்றொரு முக்கிய அம்சம் 'கொறடா உத்தரவு' (Whip) முறையாக வழங்கப்பட்டதா என்பதுதான். 2017-ல் ஓபிஎஸ் தரப்பினர், தாங்கள் கூவத்தூர் விடுதியில் இல்லாததால் தங்களுக்குக் கொறடா உத்தரவு கிடைக்கவில்லை என்று வாதிட்டனர்.
அதேபோல், தற்போதும் 25 அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிமுக கொறடாவின் உத்தரவு முறைப்படி சென்று சேர்ந்ததா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அவர்கள் "எங்களுக்கு உத்தரவு வந்து சேரவில்லை" என்று வாதிட்டால், அது சட்டப் போராட்டத்தில் அவர்களுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
சட்டமன்ற விதிகள் மற்றும் பதிவுகள்
சட்டமன்றத் தகுதி நீக்க விதிகளின்படி, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவை தொடங்கிய முதல் கூட்டத்தொடர் நடந்த 30 நாட்களுக்குள், தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் யார், அவர்களின் பதவிகள் என்ன என்பது குறித்த பட்டியலைச் சபாநாயகரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் பட்டியல் முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டதா என்பது தற்போது வரை ரகசியமாகவே உள்ளது.
மேலும், சட்டமன்றக் கட்சியின் கொறடாவாக யார் நியமிக்கப்பட்டுள்ளார், கட்சியின் 'உத்தரவு' (Direction) எவ்வாறு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான விவரங்களைச் சபாநாயகர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது அவசியம். இந்த தொழில்நுட்ப அம்சங்கள் சரியாகப் பின்பற்றப்பட்டிருந்தால் மட்டுமே தகுதி நீக்க நடவடிக்கை சட்ட ரீதியாகச் செல்லுபடியாகும்.
எடப்பாடி பழனிசாமி இப்போது எடுக்கப்போகும் ஒவ்வொரு அடியும், அதிமுகவின் எதிர்காலத்தையும் தமிழக சட்டமன்றத்தின் பலத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.












Click it and Unblock the Notifications