சட்டென மாறுது அரசியல்...உச்சகட்ட குழப்பத்தில் அதிமுக-தனிவிமானத்தில் டெல்லிக்கு திடீரென பறந்த தினகரன்
சென்னை: அதிமுகவில் உச்சகட்ட குழப்பம நிலவும் சூழ்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்லிக்கு தனி விமானத்தில் சென்றிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான களப்பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில் தேர்தல் கால களேபர காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவில் உச்சகட்ட குழப்பம்
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் (ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி) இடையேயான அதிகார யுத்தம் அதிஉச்சத்தை எட்டியுள்ளது. இத்தனை நாள் ஈபிஎஸ் கை ஓங்குவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது ஓபிஎஸ் தரப்பு. இப்போது ஈபிஎஸ் அணிக்கு எதிராக கோதாவில் குதித்திருக்கிறது ஓபிஎஸ் அணி.

பகிரங்க கோஷங்கள்
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் தொடங்கிய இந்த மோதல் வெள்ளிக்கிழமையன்று அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பகிரங்கமாகவே வெடித்தது. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இருவருமே முதல்வர் வேட்பாளர்கள் கோஷத்தை எழுப்பியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

விடுதலையாகும் சசிகலா
அத்துடன் ஓபிஎஸ் அணியின் குரல்தான் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகமாக ஒலித்தது. முதல்வர் ஈபிஎஸ் தரப்புக்கு ஆதரவு குறைவாக இருந்ததாகவும் செய்திகள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே அதிமுகவின் மாஜி பொதுச்செயலாளரான சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவது உறுதியாகி உள்ளது.

சசிகலா எப்போது விடுதலை?
சட்ட விதிகளின்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி சசிகலா விடுதலையாவார் என அதிகாரப்பூர்வமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நன்னடத்தை விதிகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த மாதம் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் சசிகலா விடுதலையாவார் என்கின்றனர் அவரது வழக்கறிஞர்கள்.

சசியின் வியூகம் என்ன?
இதனால் சசிகலாவின் வியூகம் என்னவாக இருக்கும்? அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவாரா? என்கிற கேள்விகள் எழுகின்றன. சசிகலாவை ஒருபோதும் கட்சியில் சேர்க்கவே மாட்டோம் என அமைச்சர்கள் கூறுகின்றனர். ஆனால் அதிமுக மூத்த தலைவர்களோ, இப்போதே சசிகலாவை சின்னம்மா சின்னம்மா என புகழ்பாட தொடங்கிவிட்டனர்.

தினகரன் திடீர் டெல்லி பயணம்
இந்தச் சூழ்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் டெல்லிக்கு தனி விமானத்தில் சென்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமது உதவியாளர்களை மட்டும் அழைத்துக் கொண்டு டெல்லிக்கு தினகரன் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் இருந்து வந்த அழைப்பின் பேரில்தான் அவரது இந்த பயணமாம். தினகரனின் இந்த திடீர் என்ட்ரி அதிமுகவில் மேலும் அதகளத்தை உருவாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications
