அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதா- சட்டசபையில் நிறைவேற்றம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் இன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்து கனவை தகர்த்தது. இதனால் அரியலூர் அனிதா உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்கி சட்டம் கொண்டு வந்தது. இதனையடுத்து 400க்கும் மேற்பட்ட கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர்ந்தனர்.

தமிழக அமைச்சரவை ஒப்புதல்

தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சட்டசபை தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைத்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மருத்துவபடிப்புகளைப் போல தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் நடப்பு சட்டசபை கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா அறிமுகம் செய்யப்படும் எனவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சட்டசபையில் மசோதா தாக்கல்

சட்டசபையில் மசோதா தாக்கல்

இதனடிப்படையில் இன்று சட்டசபையில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொழிற்கல்விப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை விட கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சேருவதைக் கருத்தில் கொண்டு 1997-ல் கிராமப் புற பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழிற்கல்விப் படிப்புகளில் 15% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு கல்விக் கட்டண சலுகையும் வழங்கப்பட்டது. கிராமப் புற மாணவர்கள், பின்தங்கிய பகுதிகளில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு 2006-ல் தொழிற்கல்வி படிப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. 2007-2008 முதல் பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

நீதிபதி முருகேசன் ஆணையம் பரிந்துரை

நீதிபதி முருகேசன் ஆணையம் பரிந்துரை

கடந்த பல ஆண்டுகளாக அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் போட்டியிட்டு அவர்கள் விரும்பக் கூடிய உயர் கல்வியைப் பெறுவதும் தொழிற்கல்வி படிப்புகளில் சேருவதும் மிகவும் கடினமாக இருக்கிறது. பல்வேறு சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் அனைத்து மாணவர்களுக்கும் உயர்க்லவி பெறுவதில் சமவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவபடிப்பைப் போன்றே கால்நடை மருத்துவம், வேளாண் கல்வி, பொறியியல், சட்டம் போன்ற இதர தொழிற்கல்விகளிலும் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூகப் பொருளாதார நிலைகள், அனுபவித்த குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து பரிந்துரைக்க டெல்லி உயர்நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் மூத்த அலுவலர்களைக் கொண்ட ஓர் ஆணையமானது அரசால் அமைக்கப்பட்டது.

சட்டசபையில் மசோதா ஏற்பு

சட்டசபையில் மசோதா ஏற்பு

தமிழ்நாட்டில் பலவகையான பள்ளிகளில் ஏறக்குறைய 1.3 கோடி மாணவர்கள் பயில்கின்றனர். 2019-20-ம் ஆண்டில் மேல்நிலைக் கல்வி பயின்றவர்கள் 8.5 லட்சம். இதில் 3.45 லட்சம் பேர் அரசு பள்ளி மாணவர்கள். 2020-21-ல் அண்ணா பல்கலையில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விகிதம் 0.83%. அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 6.31%; 0.44% மட்டுமே சேர்ந்துள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு தொழிற்கல்வி படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்த மசோதாவுக்கு பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வரவேற்றது. இதனையடுத்து சட்டசபை இந்த மசோதாவை ஏற்றுக் கொண்டது.

தமிழக அரசுக்கு வேல்முருகன் நன்றி

தமிழக அரசுக்கு வேல்முருகன் நன்றி

தமிழக அரசின் இந்த சட்ட மசோதாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது வரவேற்கதக்கது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். கற்றலும், கற்பித்தலுமே உலகின் எல்லா வளர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கிறது. மனிதகுலத்தின் வளர்ச்சியையும் வளர்ச்சிப்பாதையையும் தீர்மானிப்பது கல்விதான். ஆனால், கல்வியையும் ஒரு வியாபாரப்பொருளாக மாற்றிவிட்டிருக்கிற இச்சூழலில், கல்வியை யார் கற்பிக்கவேண்டும், யாருக்கு கற்பிக்கவேண்டும் என்பதையெல்லாம் பணமே தீர்மானிக்கிற அவல நிலைதான் தற்போது வரை நீடித்து வருகிறது. இதன் காரணமாகவே, கடந்த ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களின் விழுக்காடு குறைவான அளவே இருக்கிறது. தமிழ்நாடு அரசின் இத்தகைய நடவடிக்கையின் வாயிலாக, ஏழை, எளிய, நடுத்தர மற்றும் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளின் பிள்ளைகளும், நெசவுத்தொழிலாளர்களின் பிள்ளைகளும், துப்புரவு பணியாளர்களின் பிள்ளைகளும், தொழிற்கல்வியை கற்கும் வாய்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்படுத்திக்கொடுத்துள்ளார். தமிழ்நாடு சமூகநீதிக்கான மண் என்பதையும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, தொழிற்கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி, அச்சட்ட மசோதாவை நடைமுறைக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+