சர்காருக்கு போட்டி போட்டு விளம்பரம் செய்யும் பாஜக - அதிமுக.. நல்லா பண்ணுறீங்க பப்ளிசிட்டி!
சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்களும், பாஜக தலைவர்களும் மாற்றி மாற்றி விளம்பரம் செய்து வருகிறார்கள்.
சென்னை: சர்கார் படத்திற்கு ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்த தலைவர்களும், பாஜக தலைவர்களும் மாற்றி மாற்றி விளம்பரம் செய்து வருகிறார்கள்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையில் சர்கார் படம் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் நேற்று முதல் இருந்து படத்தை பார்த்துவிட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள்.
படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சர்கார் படத்தை பற்றி சில முக்கிய அரசியல் தலைகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழிசை என்ன சொன்னார்
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சர்கார் படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார். அதில், முதல்வர் கனவோடு நடிப்பவர்கள் திரையில் தான் ஆட்சி செய்ய முடியும் நிஜத்தில் ஆட்சி செய்ய முடியாது என்று தமிழிசை கூறியுள்ளார். மேலும் கள்ளக்கதையை வைத்து கள்ள ஓட்டு பற்றி படம் எடுக்கின்றனர் என்று விஜய் குறித்தும் சர்கார் குறித்தும் தெரிவித்துள்ளார்.
|
எச். ராஜா என்ன சொன்னார்
இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சர்கார் படம் குறித்து மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார். அதில், படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவுபண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா, என்று கூறியுள்ளார்.

அதிமுக என்ன சொல்கிறது
இந்த நிலையில்தான் சர்கார் படத்தின் காரணமாக நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக குறித்தும் தமிழக அரசு குறித்தும் சர்காரில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து முதல்வருடன் விவாதிக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காரணம் 1
பல்வேறு காரணங்களால் பாஜகவும், அதிமுகவும் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான சில கருத்துகள் வைக்கப்பட்டு இருக்கிறது. அதிமுகவை மறைமுகமாக சாடும் விதமாக நிறைய வசனங்கள் காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக தலைவர்களின் பெயரை மறைமுகமாக குறிப்பிடும் வகையிலும் சில காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

காரணம் 2
மேலும், பாஜக இதை பிரபலப்படுத்த இன்னொரு காரணம் உள்ளது. மெர்சல் படத்தில் விஜய் ரசிகர்களின் கலாய் வாங்கியது, விஜயின் அரசியல் வருகை பற்றிய யோசனை பாஜகவிற்கு எதிராக இருப்பது, பாஜகவின் முடிவுகளுக்கு எதிராக விஜய் பல இடங்களில் கருத்து தெரிவித்து இருப்பது, இந்த படத்திலும் மத்திய அரசுக்கு எதிராக சில வசனங்களை வைத்து இருப்பது என்று நிறைய இடங்களை விஜய் பாஜகவை நன்றாகவே வெறுப்பேற்றி இருக்கிறார். இதனால் பாஜக இந்தமுறையும் அவர் படம் மீது கோபத்தில் உள்ளது.

இப்பவும் ஹிட்
இதனால் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் விஜயின் சர்கார் படம் இந்த முறையும் சூப்பர் ஹிட் நிலைக்கு சென்று இருக்கிறது. சென்ற முறை மெர்சல் படத்திற்கும் இதே நிலைதான் ஏற்பட்டது . தற்போது அதிமுகவும் பாஜகவும் இப்படி பேசி இருப்பது படத்தின் வசூலுக்கு இன்னும் உதவ வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications