தமிழ்நாடு மாடல்! அமெரிக்காவின் மினசோட்டா பள்ளிகளில் காலை, மதிய உணவு திட்டம்! ஸ்டாலின் பாணியில் மாஸ்!
தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் ஏற்கனவே வெற்றிபெற்ற நிலையில் காலை உணவு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை: தமிழ்நாட்டை போலவே அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை உணவு திட்டம் காரணமாக பள்ளிகளுக்கு மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதல்முறையாக காலை உணவு திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இந்த உணவு வழங்கப்பட உள்ளது.

மற்ற மாநிலங்கள்
முதலில் ஸ்டாலினின் கனவு திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் அனைத்து வகுப்புகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் இந்த திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மற்ற மாநிலங்கள் தாண்டி மற்ற நாடுகளிலும் இதே போன்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டை போலவே அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

எங்கே?
மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ் (டி) அனைத்து மாணவர்களுக்கும் இலவச பள்ளி மதிய மற்றும் காலை உணவு திட்டத்தில் நேற்று கையெழுத்திட்டார். அவர் தேர்தல் சமயத்தில் இதை வாக்குறுதியாக கொடுத்து இருந்தார். இந்த நிலையில் சொன்னபடியே திட்டத்தை நிறைவேற்றி உள்ளார். அணைத்து மாணவர்களும் என்றால் அனைத்து பின்புலத்தை கொண்ட மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். அவர்களின் பெற்றோர்கள் என்ன வருமானம் வாங்கினாலும் அவர்களுக்கு உணவு வழங்கப்படும். இது மிகப்பெரிய சாதனை, இனி மாணவ, மாணவியர் பசியோடு இருக்க மாட்டார்கள் என்று இந்த திட்டத்தை நிறைவேற்றிய கவர்னர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மாடல்
தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டம் ஏற்கனவே வெற்றிபெற்ற நிலையில் காலை உணவு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.33.56 கோடியில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முன்னோடி. சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே நீதிக்கட்சி மூலம் சென்னையில் மதிய உணவு திட்டம் அமல் படுத்தப்பட்டது. பிற மாநிலங்கள் மதிய உணவு திட்டத்திலேயே இன்னும் முழுமை பெறாத நிலையில்தான் தமிழ்நாடு அரசு காலை உணவு திட்டத்தை கையில் எடுத்து இருக்கிறது .

பயன் என்ன
கடந்த வருடம் மே மாதம் 7ம் தேதி இதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார். இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட 1,543 பள்ளிகளில் 1,319 பள்ளிகளில் மாணவ, மாணவியர் வருகை பதிவேடு அதிகரித்து உள்ளது. மாநில திட்டமிடல் துறை சார்பாக எடுக்கப்பட்ட சர்வேயின் கீழ் இந்த தகவல் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. அதிலும் கவனிக்க வேண்டிய விஷயம் 1,086 பள்ளிகளில் வருகை 20% வரை அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் 22 பள்ளிகளில் 40% அளவிற்கு வருகை பதிவேடு உயர்ந்துள்ளது. இந்த திட்டம் மூலம் ஒருநாளுக்கு ஒரு மாணவருக்கு ₹12.71 ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications