ஒட்டுமொத்த சென்னையும் எதிர்பார்த்த அறிவிப்பு! பூந்தமல்லி-போரூர் ரூட்டில் மெட்ரோ சேவை எப்போ தொடங்கும்
சென்னை: சென்னையில் இப்போது மூன்று வழித்தடங்களில் மெட்ரோ கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே 2ம் கட்ட மெட்ரோவில் முதற்கட்டமாக பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், எப்போது முதல் மெட்ரோ சேவை தொடங்கும் என்பது குறித்தும் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
சென்னை மெட்ரோ இப்போது 2 ரூட்களில் இயங்கி வரும் நிலையில், இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதேநேரம் மறுபுறம் 2ம் கட்ட மெட்ரோ கட்டுமானமும் தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் நடந்து வருகிறது.

இதற்கிடையே பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் குறித்து முக்கிய அறிவிப்பு இடம்பெற்றுள்ளது. அதாவது பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான வழித்தடத்தில் இந்த டிசம்பர் மாதம் முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்
எப்போது இயங்கும்
இது தொடர்பாக அவர் தனது பட்ஜெட் உரையில், "தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ இரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக 63246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடங்களில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்." என்றார்.
ஏன் முக்கியம்
இப்போது மாதவரம்- சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 116.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ 2ம் கட்ட கட்டுமானம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் டிராபிக் அதிகரித்து வருகிறது. இதனால் வெயில் காலங்களில் டூவீலரில் வெளியே செல்லவே முடியாத சூழலே நிலவுகிறது. இதனால் மெட்ரோவில் பயணம் செய்யப் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இரண்டாம் கட்ட மெட்ரோ எப்போது இயங்கும் எனச் சென்னை மக்கள் ஆர்வமாகக் காத்திருந்த நிலையில், அதற்கான பதில் இப்போது கிடைத்துள்ளது.
பின்னணி
முதலில் இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தர மறுத்தது. மெட்ரோ 2ம் கட்டம் மாநில அரசின் திட்டமாக முன்னெடுக்கப்பட்டதால் நிதி தர முடியாது என மத்திய அரசு தெரிவித்தது. இருப்பினும், தமிழக அரசு தொடர்ந்து நிதி கேட்டு வலியுறுத்திய நிலையில், முதல்வர் ஸ்டாலினும் இது தொடர்பாகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். அதன் பிறகே நிதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோவை மெட்ரோ
அமைச்சர் தங்கம் தென்னரசு மேலும், "கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ இரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ இரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications