குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. பாலைவார்த்த தமிழக அரசு.. ரேஷன் அரிசியா.. பெருகும் நம்பிக்கை
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதில் மாநில அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. அந்தவகையில் அடுத்த அதிரடியை மேற்கொண்டுள்ளதுடன், ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது.
சமீபகாலமாகவே, ரேஷன் அரிசி கடத்தல் விஸ்வரூபமெடுத்துள்ளது.. எனவேதான், ரேஷன் பொருள் பதுக்குதல் குறித்து, இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

கடத்தல் அரிசி: மற்றொருபுறம், கடத்தல் அல்லது பதுக்கலில் ஈடுபடுவோர் மீது இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்குநடுவில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டபடியே உள்ளனர். எனினும், ரேஷன் அரிசி கடத்தல்கள் குறைந்துள்ளதே தவிர, அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக தேனி மாவட்டம் குமுளி, கம்பம், மொட்டு வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடந்தவாரம்கூட செய்திகள் வந்திருந்தன..
ரேஷன் அரிசி: இப்படி அரிசி கடத்தலால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.. 10 நாட்களுக்கு முன்புகூட, தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட கக்கன்ஜி காலனியில் ரஃபீக் என்பவருக்குச் சொந்தமான அரிசி ஆலை உள்ளது. இங்கு ரேஷனில் வழங்கப்படும் அரிசியை வாங்கி அதனை குருணையாக அரைத்து தீவனத்திற்காக விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து குடிமைப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் அந்த அரிசி ஆலையில் சோதனை நடத்தினர். அப்போது தீவனத்திற்காக அரைக்கப்பட்ட 1850 கிலோ குருணை அரிசி மூட்டைகளாக சிக்கியது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த அரிசி ஆலைக்கு சீல் வைத்துவிட்டார்கள்.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலுமே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.. அந்தவகையில், கடந்த மே மாதத்தில் மட்டும் 2447 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி மீட்கப்பட்டுள்ளதாம்.
குடும்ப அட்டைதாரர்கள்: இதுகுறித்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், "அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.
அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அதிகாரிகள்: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீது, இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தடுப்பு காவல்: மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 01.05.2023 முதல் 31.05.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ18,41,994/- (ரூபாய் பதினெட்டு லட்சத்து நாற்பத்தொராயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்கு மட்டும்) மதிப்புள்ள 2447 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி, 269 எரிவாயு உருளைகள், 180 கிலோ கோதுமை, 1100 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் 450 லிட்டர் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 150 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
பதுக்கல்: குற்றச்செயலில் ஈடுபட்ட 561 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 ன்கீழ் 2 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications