காரை விட்டு இறங்கிய முதல்வர்.. திடீரென குடிசை மாற்று வாரியத்தில் ஆய்வு.. கிடுகிடுத்த அதிகாரிகள்
சென்னை: சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்பட்ட கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
கடந்த அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தற்போது சர்ச்சையில் இருக்கிறது. புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் கட்டப்பட்ட இந்த வீடுகள் சரியான தரத்தில் இல்லை, வீடுகள் கட்டப்பட்டு இரண்டு வாரத்திலேயே சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழும் அளவிற்கு வீடுகள் மோசமாக இருப்பதாக புகார்கள் வைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகிய இரண்டு பேரும் புளியந்தோப்பு பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.

வீடுகள்
இவர்களின் ஆய்வின் முடிவில் இங்கு வீடுகள் மோசமான தரத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சட்டசபையிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது. இங்கு தரமற்ற வீடுகள் கட்டப்பதாக மக்கள் புகார் வைத்த நிலையில் இது தொடர்பாக தனியாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதோடு குடிசை மாற்று வாரிய பகுதியில் புதிதாக சிமெண்ட் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன.

முறைகேடு
இந்த நிலையில்தான் நேற்று சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரியத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு ராமணபுரம் பகுதியில் உள்ள கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்தார். முந்தைய ஆட்சியில் குடிசை மாற்று வாரியங்கள் தரமற்று கட்டப்பதாக புகார்கள் வந்த நிலையில், தற்போது கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை ஸ்டாலின் இப்படி ஆய்வு செய்துள்ளார்.

ஆய்வு
நேற்று திடீரென திட்டமிட்டு இந்த ஆய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டதாக தெரிகிறது. இதனால் அங்கு இருந்த அதிகாரிகள் பரபரப்பாக இருந்தனர். சென்னை பெரம்பூர் பகுதிக்கு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் சேகர் பாபுவுடன் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த அதிகாரிகளிடம் கட்டிடம் எப்படி இருக்கிறது, சிமெண்ட், செங்கல் தரம் எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பினார். கட்டிடத்தின் உள்ளே சென்று சோதனை செய்தார்.

ஸ்டாலின்
அதோடு கட்டிடம் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்துடன் பேசிய முதல்வர் ஸ்டாலின், கட்டிடத்தின் நிலை குறித்தும், பாதுகாப்புதன்மை குறித்தும் கேள்வி எழுப்பினார். பின்னர் அங்கு இருக்கும் சிமெண்ட் பூச்சுகள் எப்படி இருக்கிறது, சுவர்கள் எப்படி இருக்கிறது என்று கையால் சோதனை செய்து பார்த்தார். பின்னர் இந்த குடிசை மாற்று குடியிருப்பை சுற்றி இருக்கும் பகுதிகளில் கூடுதலாக மரங்களை நட வேண்டும், இந்த பகுதி வெறிச்சோடி இருக்க கூடாது என்று குறிப்பிட்டார்.

கேபி பார்க்
கேபி பார்க் குடிசை மாற்று வாரியத்தில் சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுந்தது பெரிய சர்ச்சையானது . இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த எதிர்பாராத ஆய்வை மேற்கொண்டுள்ளார். கௌதமபுரம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒவ்வொரு வீடும் 406 சதுர அடி கொண்ட வீடுகள் ஆகும். இந்த கட்டிடம் 3 பிளாக் கொண்ட கட்டிடம் ஆகும். மொத்தம் ஒவ்வொரு பிளாக்கில் 14 மாடிகள் உள்ளது. மொத்தமாக இங்கு 840 வீடுகள் உள்ளன.












Click it and Unblock the Notifications