முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று 72வது பிறந்தநாள்.. “இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்” என சூளுரை!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களைச் சந்தித்து வருகிறார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, நேற்று முதலே அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் திமுக கூட்டணிக் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஸ்டாலினை வாழ்த்தி பேசினர். அந்த நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "நாம் தொடங்கியுள்ள உரிமைப்போரில் வெற்றிதான் வரும் என்ற நம்பிக்கையை என் பிறந்தநாள் வாழ்த்தாக வழங்கிய தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும் - தொண்டர்களுக்கும் - நான் உழைக்க ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருக்கும் உடன்பிறப்புகளுக்கும் நன்றி! நன்றி! நன்றி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று காலை வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். அண்ணா - கலைஞர் வழியில் அயராது உழைத்து ஆதிக்கத்தை வீழ்த்தி இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என முழக்கமிட்ட்டார்.

அதைத்தொடர்ந்து அவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். அண்ணா அறிவாலயம் வரும் அவருக்கு, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு தலைமையில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, கலைஞர் அரங்கில், அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். பின்னர், கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.












Click it and Unblock the Notifications