பதக்க கனவுடன் காத்திருக்கும் ஒலிம்பிக் நாயகர்கள்.. உற்சாகமாக நம்பிக்கை ஊட்டிய மு.க.ஸ்டாலின்.. செம!
சென்னை: ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பலர் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் காணொலிக் காட்சி மூலமாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் போட்டியில் நீங்கள் கலந்துகொள்ள இருக்கிறீர்கள் என்பதை நினைக்கும்போதே உங்களுக்கு எத்தகைய பெருமை இருக்கிறதோ - அதேபோல் எனக்கும் பெருமையாக இருக்கிறது'' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீங்கள் அடைந்த வேதனைகள்
உங்கள் அனைவரது திறமை உலகம் பாராட்டும் வகையில் இருக்கிறது. நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்ற தீவிர வேட்கையுடன் விளையாடுபவர்கள். நீங்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என்பதுதான் பலருக்குத் தெரியும். ஆனால் இந்த இடத்தை அடைவதற்காக நீங்கள் இதுவரை எடுத்துக்கொண்ட பயிற்சிகள், அடைந்த துயரங்கள், வேதனைகள் அவர்களுக்குத் தெரியாது.

வறுமை சூழ்ந்த வாழ்க்கை
உங்களில் பலருக்கும் வறுமை சூழ்ந்த வாழ்க்கையாக இருக்கிறது. ஆனாலும் விளையாட்டுப் போட்டிகளின் மீது உங்களுக்கு இருந்த ஆர்வமும், திறமை மீது நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையும்தான் உங்களை இந்த உயரத்துக்கு அழைத்து வந்துள்ளது. ஷூ வாங்குவதற்குக்கூட பணமில்லாமல்; உரிய ஊட்டச்சத்து உணவுகள் கூட கிடைக்காமல் உங்களில் சிலர் பயிற்சி பெற்று வந்துள்ளீர்கள்.

இதுதான் எனது நம்பிக்கை
விளையாட்டில் திறமையுள்ள மாணவ மாணவியருக்கு அவர்களது வளர்ச்சிக்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. நீங்கள் சந்திக்கும் பொருளாதாரத் தடைகள் இனி இல்லாதவாறு அரசு பார்த்துக் கொள்ளும். நீங்கள் அனைவரும் வெற்றி பெற்று பதக்கங்களோடுதான் தமிழ்நாட்டுக்கு வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.
|
மக்களின் விருப்பம்
இது என்னுடைய நம்பிக்கை மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் நம்பிக்கையும் இதுதான்.ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வோருக்கு 3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு 2 கோடியும், வெண்கலப் பதக்கம் வெல்வோருக்கு 1 கோடி ரூபாயும் சிறப்புப் பரிசாக வழங்கப்படும் என அறிவித்தேன். இந்தத் தொகையைத் தமிழ்நாடு அரசிடம் இருந்து பெறவேண்டும் என்பதே எனது ஆசையும் விருப்பமும் ஆகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications