தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை வந்தார்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு!
சென்னை: தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி சென்னை வந்தடைந்தார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உற்சாக வரவேற்பு கொடுத்தார். அமைச்சர்கள், தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்டோரும் வரவேற்றனர்.
தமிழகத்தின் கவர்னராக இருந்து வந்த பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். தற்போது அவர் பஞ்சாப் கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்டார்.
ஆர்.என்.ரவி நாகாலாந்து கவர்னராக இருந்து வந்தவர். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்துள்ளார். கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்துள்ளார்.

தமிழகம் வந்தார்
உளவுத்துறையிலும் பணியாற்றியுள்ள ஆர்.என்.ரவி, 2019ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து கவர்னராக இருந்து வருகிறார். தமிழகத்தின் 25-வது கவர்னராக வருகிற 18-ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார் ஆர்.என்.ரவி. அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். இந்த நிலையில் புதிய கவர்னராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவி இன்று தமிழகம் வந்தார்.

மு.க.ஸ்டாலின் வரவேற்பு
சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி புன்னகை மலர வரவேற்றார். தனது குடும்பத்துடன் வந்த ஆர்.என்.ரவி குடும்ப உறுப்பினர்களை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு ஆகியோரும் வரவேற்றனர். இது தவிர தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோரும் வரவேற்பு கொடுத்தனர்.

போலீசார் அணிவகுப்பு
இதனை தொடர்ந்து புதிய கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டு சென்றார். சென்னை போக்குவரத்து போலீஸ் சார்பில் போலீசார் விமான நிலையம் முதல் கவர்னர் மாளிகை வரை புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு இரு சக்கர வாகனத்தில் அணிவகுத்து மரியாதை கொடுத்தனர். கவர்னர் மாளிகை வளாகத்தில் குதிரைபடையினர் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.

பல்வேறு கருத்துக்கள்
ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக பதவியேற்கும் முன்பாகவே அவர் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவின. ''ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டதில் சந்தேகம் இருக்கிறது. அவர் தமிழக அரசை உளவுபார்த்து தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்க கொண்டு வரப்படுகிறாரோ என்ற கேள்வி அனைவரின் மனதில் எழுந்துள்ளது'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications