நல்லகண்ணு 100-வது பிறந்த நாள்: திமுக தலைமையிலானது நிரந்தர கூட்டணி- முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்!
சென்னை: முதுபெரும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் (நூற்றாண்டு விழா) விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின், எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும்; திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியானது கொள்கைக் கூட்டணி மட்டுமல்ல நிரந்தரமான கூட்டணி என்றும் தெரிவித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நிறுவப்பட்ட 26.12.1925 ஆம் தேதியில் பிறந்த மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு அவர்களுக்கு 100-வது பிறந்த நாளாகும். நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் இடதுசாரித் தலைவர் நல்லகண்ணுவின் பிறந்த நாள் விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நூற்றாண்டு; நல்லகண்ணுவுக்கு நூற்றாண்டு; இப்படி ஒரு பொருத்தம் யாருக்கும் கிடைக்காது. இத்தகைய அரியவாய்ப்பைப் பெற்றுள்ள நல்லகண்ணுவை வாழ்த்த வரவில்லை; அவரிடம் வாழ்த்துப் பெற வந்துள்ளேன். எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு நல்லகண்ணு வழிகாட்ட வேண்டும்.
எல்லாருக்கும் எல்லாம், சமூகநீதி - சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என பாடுபடும் திராவிட மாடல் ஆட்சிக்கும், திட்டங்களுக்கும் அய்யா நல்லகண்ணு உறுதுணையாக இருக்கிறார். அமைதியாக - ஆழமாக சிந்தித்து பேசக்கூடிவர் நல்லகண்ணு. அவரின் பிறந்தாள் விழாவில் அவரிடம் வாழ்த்து வாங்க வந்துள்ளேன்.
இன்றைக்கு தமிழகத்தில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி , 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். இந்த கூட்டணி கொள்கைக் கூட்டணி மட்டுமல்ல; நிரந்தரக் கூட்டணிதான் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம். இதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்றார்.

நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்த நாளுக்கு கனிமொழி எம்பி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அதில், பொதுவுடைமை சித்தாந்தத்தின் போர்வாளாக - சமரசமற்ற மக்கள் போராளியாக - எளிய வாழ்விற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களது நூற்றாண்டு பிறந்தநாளில், எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல்நலத்துடன், இன்னும் பல ஆண்டுகள் தனது சமூகப் பணியைத் தொடர விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தமது வாழ்த்துச் செய்தியில், இன்றைய தினம், நூற்றாண்டு பிறந்த நாள் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், நல்லகண்ணு அவர்களுக்கு, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த சமூக சீர்திருத்தவாதியான நல்லக்கண்ணு அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications