4-0.. அனல் பறந்த இந்தியா vs பாகிஸ்தான் ஹாக்கி ஆட்டம்.. நேரில் ரசித்த முதல்வர் ஸ்டாலின்!

7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. 6 நாடுகள் பங்கேற்றுள்ள இந்தப் போட்டியில் ஹர்மன் பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகள் பெற்றும் மலேசியா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றும் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் தென்கொரியா 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், பாகிஸ்தான் 1 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் ஜப்பான் 2 டிரா, 1 வெற்றி, 3 தோல்வியுடன் 5 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன. சீனா 1 டிரா , 3 தோல்வியுடன் 1 புள்ளியுடன் கடைசி இடம் பிடித்து வாய்ப்பை இழந்தது.
அரை இறுதியில் நுழைவதற்கான எஞ்சிய 2 இடத்துக்கான போட்டியில் தென் கொரியா, பாகிஸ்தான், ஜப்பான் ஆகிய 3 அணிகளும் இருக்கின்றன. இந்நிலையில் இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் இறுதி போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியும்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து ரசித்து வருகிறார். இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஹாக்கி போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கிரிக்கெட் வீரர் அஷ்வின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் வென்று 4வது இடத்தை தக்க வைத்தால், வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சை நடத்தும். இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைப் பொறுத்தே ஜப்பான் அரையிறுதிக்குச் செல்லுமா என்பதும் தெரியவரும்.

போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே பாகிஸ்தான் அணி தனது முதல் கோலை அடிக்க முயன்றது. பாகிஸ்தான் அணி கோல் அடித்த நிலையில் இந்திய அணி ரிவ்யூ கேட்டதால் கோல் திரும்பப் பெறப்பட்டது. முதல் சுற்றின் கடைசி நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங் இந்த போட்டியின் முதல் கோலை அடித்தார்.
இரண்டாவது சுற்றில் இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் சிங் மற்றொரு கோல் அடித்து அசத்தினார். இரண்டாவது சுற்றின் இறுதி நிமிடத்தில் இந்திய அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தவறவிட்டது இந்திய அணி. மூன்றாவது சுற்றின் தொடக்கத்தில் இந்திய அணியின் ஹுஜ்ரஸ் சிங் பெனால்டி கார்னர் மூலம் இந்திய அணிக்கான மூன்றாவது கோலை அடித்தார்.
கடைசி சுற்றில் இந்திய அணியின் மந்தீப் மற்றும் ஆகாஷ் தீப் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக மற்றொரு கோலை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.












Click it and Unblock the Notifications