இந்த மனசுதான்! மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பில் உதவி பொருட்கள்.. பாஜக முதல்வருக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்கக் கோரி, மணிப்பூர் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மணிப்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் ரூ. 10 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்து மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மணிப்பூரில் உள்ள தமிழர்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் தொடர்ந்து பாதுகாப்பு அளிக்குமாறு மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங்கிடம் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் காரணமாக 50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர், இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்கள் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் தேவைப்பட்டால் அவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இந்த மனிதாபிமான உதவிக்கு மணிப்பூர் மாநில அரசின் ஒப்புதலை வழங்குமாறு தாம் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரியப்படுத்தவும் கோரியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் மணிப்பூர் மாநில அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொண்டு நிவாரணப் பொருட்களை விரைவாக அனுப்ப இயலும் என்றும் தனது கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார். இதற்காக மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தமிழ்நாட்டில் பயிற்சி பெற பதிவு செய்வதற்கான விவரங்களையும் வெளியிட்டிருந்தார்.
தற்போது மணிப்பூர் மாநிலத்தில் ஆசிய விளையாட்டு கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் அம்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து உயர்தர பயிற்சிகள் பெற அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications