ஒரே நாளில் ரூ.8,000 சம்பாதிக்கலாம்.. ரூ.98,000 இழந்த இளைஞர்.. அமேசான் பெயரில் பணம் பறிக்கும் கும்பல்
சென்னை: இந்த தொழில்நுட்ப யுகத்தில் பணம் மிகவும் அத்தியாவசிய தேவையாக இருக்கும் நிலையில், கடினமாக உழைத்து முன்னுக்கு வருபவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதே வேளையில் எப்படியாவது முன்னுக்கு வர வேண்டும் என்று குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்களும் பெருக ஆரம்பித்து விட்டனர்.
இன்றைய தொழில்நுட்பங்களை கையில் வைத்தே மோசடி கும்பல் ஏழை, எளிய மக்களை ஏமாற்றி வருகின்றனர். இப்படி ஒரு சம்பவம்தான் சென்னை இளைஞருக்கு நடந்துள்ளது. அதை பற்றி விரிவாக காண்போம்.

சென்னை வடபழனியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளை யூ டியூப் மூலம் நேரடி ஒளிபரப்பும் வேலை செய்தும் வந்துள்ளார். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்த சீனிவாசனுக்கு, செல்போனில் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் அமேசான் நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் நாளொன்றுக்கு ரூ.8000 வரை சம்பாதிக்கலாம் என குறிப்பிட்டு இருந்தது.
அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப்பட்டு இருந்த செல்போன் எண்ணை சீனிவாசன் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய நபர்கள், 'அமேசான் நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பு இருப்பதாகவும் நாங்கள் அனுப்பியுள்ள கீழ்க்கண்ட லிங்கில் சென்றால் வீட்டில் இருந்தபடியே தினமும் பணம் சம்பாதிக்கலாம்' என தெரிவித்துள்ளனர். லிங்கில் இருக்கும் இணையதள பக்கத்திற்குள் சென்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் மீது முதலீடு செய்தால் நீங்கள் முதலீடு செய்த பணத்தை விட அதிக பணம் உங்கள் வங்கி கணக்குக்கு வந்து விடும்' என்று கூறியுள்ளனர்.
அதனை நம்பி ஸ்ரீனிவாசன் முதலில் ஒரு பொருளின் மீது 500 ரூபாய் முதலீடு செய்தபோது சிறிது நேரத்தில் 850 ரூபாய் அவரது வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. இதனை நம்பிய அவர் மீண்டும் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தபோது சிறிது நேரத்தில் ரூ.1500 அவரது வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. உற்சாகத்தில் துள்ளிக் குதித்த சீனிவாசன் 4,000 ரூபாய் முதலீடு செய்தபோது அதில் குறிப்பிட்டபடி ரூ.9 ஆயிரம் திருப்பி கிடைக்கவில்லை. மேலும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்தால் ஒட்டுமொத்தமாக முதலீடும், லாபமும் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.
அதனை நம்பி சீனிவாசன் மொத்தமாக ரூ.10,000 முதலீடு செய்தார். அதற்கும் இவருக்கு தொகை திருப்பி கிடைக்கவில்லை. தொடர்ந்து அந்த நபர்கள் ''இப்படி பணம் கட்ட வேண்டும், இந்த பொருளில் பணம் கட்ட வேண்டும்' என்று ஆசை காட்டியதன் காரணமாக ஒட்டுமொத்தமாக ரூ. 98 ஆயிரம் முதலீட்டு தொகை செலுத்தி உள்ளார் சீனிவாசன். ஆனால் அவர் செலுத்திய தொகையில் ஒரு ரூபாய் கூட திருப்பி கிடைக்கவில்லை. இதன்பின்புதான் ஏமாற்றபட்டதை சீனிவாசன் உணர்ந்துள்ளார். நண்பர்களிடம் விவரம் கேட்டபோதும் இது ஒரு மோசடி குறுஞ்செய்தி எனவும், அமேசான் நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடி நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சீனிவாசன், தான் ஏமாற்றப்பட்டது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு சைபர் கிரைம் போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. ''அமேசான் போன்ற பிரபல நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி சில நிமிடங்களில் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று ஆசைகாட்டி மோசடி நடந்து வருகிறது. அதுவும் குறிப்பாக வேலை தேடும் இளைஞர்களை குறிவைத்து இந்த மோசடி நடந்து வருகிறது. எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்'' என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications