நொறுங்கும் கூட்டணி திட்டங்கள்.. ரஜினியின் அறிவிப்பால் ஷாக்கில் 2 கட்சிகள்.. 2021ல் என்ன நடக்கும்?
தமிழகத்தில் அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டி திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையில் மட்டும்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: தமிழகத்தில் அடுத்த வருடம் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் போட்டி திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையில் மட்டும்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்புகள் குறைவாகி வருகிறது.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலுக்கு சரியாக ஒரு வருடம் இருக்கிறது. பெரும்பாலும் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான கூட்டணி திட்டங்கள், பேச்சுவார்த்தைகள் இப்போதே தயாராகி வருகிறது.
தமிழகத்தில் இருக்கும் ''அசுர பலம்'' கொண்ட திராவிட கட்சிகள் தொடங்கி நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் போன்ற வளர்ந்து வரும் கட்சிகளும் கூட சட்டசபை தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. விரைவில் பெரிய பெரிய பொதுக்கூட்டங்கள் தொடங்க வாய்ப்புள்ளது.

என்ன நிலவரம் இருந்தது
இதில் தற்போது ரஜினிகாந்தும் கவனம் ஈர்த்துள்ளார். கடந்த 2017ம் வருடம் அரசியலில் குதிக்க போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். அதன்பின் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவில்லை. ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்டதும் பெரிய அளவில் தமிழக அரசியலில் கணக்குகள் மாறியது. தமிழகத்தில் புதிய கூட்டணிகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முக்கியமாக மும்முனை போட்டி உருவாகும் என்று கணிக்கப்பட்டது.

மும்முனை போட்டி
தற்போது இருக்கும் லோக்சபா தேர்தல் கூட்டணிபடி பார்த்தால் திமுக - காங்கிரஸ் - விசிக - மதிமுக + ஒரு பக்கமும், அதிமுக - தேமுதிக - பாமக - பாஜக + இன்னொரு பக்கமும் இருக்கிறது. இதில் திமுக கூட்டணிதான் லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த நிலையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இந்த கூட்டணி கணக்கு மாறும் என்று கணிக்கப்பட்டது. மொத்தமாக சிறிய கட்சிகள் அணி மாறும் என்று கணிக்கப்பட்டது.

சிறிய கட்சிகள்
அதன்படி ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால், பாஜக, பாமக, இரண்டு கட்சிகளும் ரஜினிகாந்த் உடன் சேரும். பாமக இதற்காக இப்போதே ரஜினிகாந்த் உடன் நெருக்கமாகி வருகிறது. பாஜக தலைவர்கள் மிகவும் நெருக்கமாக ரஜினிகாந்த் உடன் பழகி வருகிறார்கள். ஆகவே இவர்கள் மூவரும் சேர்ந்து தமிழகத்தில் தனியாக புது கூட்டணியை உருவாக்குவார்கள். அதிமுக தனியாக வேறு சில கட்சிகளுடன் கூட்டணி வைக்கும். திமுக அதே கூட்டணியில் தொடரும் என்று கணிக்கப்பட்டது.

பெரிய தீவிரம்
இதனால் தமிழகத்தில் மூன்று பெரிய கூட்டணிகள் போட்டியிட வாய்ப்புள்ளது எனப்பட்டது. மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் எல்லாம் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு காரணமாக, மொத்தமாக கூட்டணி நிலைப்பாடுகள் மாறி உள்ளது. மொத்தமாக பாமக, பாஜகவின் கூட்டணி திட்டங்கள், கனவுகள் களைந்து போய் உள்ளது.

ரஜினி என்ன சொன்னார்
ரஜினிகாந்த் தனக்கு முதல்வராக விருப்பம் இல்லை என்று கூறிவிட்டார். வேறு புதிய , தகுதி உள்ள நபரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பேன் என்று கூறியுள்ளார். இப்படி இருக்கும் போது, ரஜினி இல்லாமல், அவரின் கட்சிக்கு மக்கள் வாக்களிக்க பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. ரஜினியின் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு இதனால் மிக மோசமாக குறைந்துள்ளது. இருந்த வெற்றிவாய்ப்பையும் அந்த கட்சி இழந்து இருக்கிறது.

ரஜினி கூட்டணி மாட்டார்கள்
இதனால் ரஜினிகாந்த் உண்மையில் கட்சி தொடங்கி தேர்தலை சந்திக்க விரும்பினாலும் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ரஜினியுடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள். ரஜினியின் இந்த முடிவால், அவருடன் கூட்டணி வைத்து ரிஸ்க் எடுக்க கட்சிகள் அச்சப்படும். முக்கியமாக அதிமுக போன்ற வலுவான, எளிதான ஆப்ஷன் இருக்கும் போது, கண்டிப்பாக பாமக, பாஜக ஆகியவை ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை.

தனித்து விடப்படுவார்
இதனால் அரசியலுக்கு வருவதற்கு முன்பே நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து மொத்தமாக தனித்து விடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது . அவருடன் சேர பெரிய கட்சிகள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் அதே அதிமுக கூட்டணி தொடரும். திமுக கூட்டணியும் அப்படிதான் இருக்கும், இரண்டு முனை போட்டிதான் நிலவ போகிறது என்கிறார்கள்.

இரண்டு முனை போட்டி
அதன்படி திமுக கூட்டணியில் திமுக - காங்கிரஸ் - விசிக - மதிமுக + ஆகிய கட்சிகளும், அதிமுக கூட்டணியில் , அதிமுக - தேமுதிக - பாமக - பாஜக + ஆகிய கட்சிகளும் இருக்கும். ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் அவர் தனியாகவும், மக்கள் நீதி மய்யம் தனியாகவும், நாம் தமிழர் தனியாகவும் போட்டியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆகவே சட்டசபை தேர்தலில் பெரிய அளவில் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications