TN Election Exclusive: ஏசி சண்முகம், பாரிவேந்தருக்கு 2 தொகுதிகள்.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆஃபர்!
சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐஜேகே மற்றும் புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஐஜேகே தனிச் சின்னத்திலும் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்திருக்கிறது. மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்திற்கு பின் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் இரவில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது தொகுதி பங்கீடு தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் எந்தக் கருத்துக்களும் அப்போது கூறப்படவில்லையாம். ஆனால் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளான தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன் தரப்பு, திருமாறன் உள்ளிட்டோர் தங்களுக்கு விருப்பமுள்ள தொகுதிகளின் பட்டியலை கொடுத்திருக்கின்றனர்.
அப்போது புதிய நீதிக் கட்சி தரப்பில் 6 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2 தொகுதிகளுக்கு ஒப்புதல் அளித்ததாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சி தரப்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2 தொகுதிகளுக்கு மேல் வாய்ப்பில்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.
அதேபோல் ஐகேஜே நிர்வாகிகள் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று பிடிவாதம் காட்டி இருக்கின்றனர். புதிய நீதிக் கட்சியோ இரட்டை இலைக்கு பதிலாக தாமரை சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டி இருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் தரப்பில் ராஜ்ய சபா சீட் கோரிக்கை வைக்கப்பட்டது நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னரே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். பிரதமர் மோடி அடுத்ததாக திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அப்போது தொகுதி பங்கீட்டை நிறைவு செய்யும் முடிவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பியூஷ் கோயல் இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications